×

வரிசையில் காத்திருக்க வைக்க வேண்டாம் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை-கலெக்டர் உத்தரவு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை எல்எப்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதில், மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி ஐஏஎஸ்,  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கான பணிகளை முறையாக தெரிந்து கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாளில் வாக்குச்சாவடிக்கு சென்று, மாதிரி வாக்குப்பதிவை மேற்கொண்டு. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான முறையில் இயங்குகிறதா என்பதையும், தேவையான முன்னேற்பாடு பணிகளையும், படிவங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படும் படிவங்களை எவ்வித தவறும் ஏற்படாத வண்ணம் பூர்த்தி செய்வதை தெரிந்து கொள்ள வேண்டும்.  வாக்களிக்க தெரியாத நபர்கள் எவரேனும் வாக்களிக்க உதவி செய்யுமாறு கேட்கும்போது அவர்களை வெளியில் ஒட்டப்பட்டுள்ள வாக்களிப்பது எப்படி என்பதற்கான படிவத்தினை பார்த்து தெரிந்து கொள்ளும்படி கூற வேண்டும்.வாக்காளர்களுக்கு எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட  பட்டனை அழுத்துங்கள் என்று தெரிவிக்கக்கூடாது. வாக்குப்பதிவின்போது அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு அருகில் சென்று   ஏதேனும்  பிரச்னையை சரி செய்யும்போது  அங்குள்ள பூத் ஏஜென்டை அருகில் வைத்துக்கொண்டு அப்பணியை செய்ய வேண்டும்.  ஆர்வத்தில் சிலர் வாக்குப்பதிவின்போது கைபேசியில் வாக்குப்பதிவை பதிவு செய்வதையும், செல்பி புகைப்படம் எடுப்பதையும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும்.வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களை வரிசையில் காத்திருக்க வைக்காமல் வாக்களிக்க முன்னுரிமை வழங்க வேண்டும்.  வாக்களிப்பதற்காக மாற்றுத்திறனாளி நபர்கள் எவரேனும் இருந்தால் அவர்களை வாக்குச்சாவடிக்கு குறிப்பிடப்பட்ட நேரத்தில் விரைவாக வந்து வாக்களித்து செல்வதற்கு அறிவுறுத்த வேண்டும்.  இதனால் மற்றவர்களுக்கு வாக்களிப்பதில் காலதாமதம் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.  காலதாமதமாக வாக்குப்பதிவு செல்வதை கண்காணித்து, வெளியில் கூட்டம் நிற்கின்றதையறிந்து வேகமாக செயல்பட வேண்டும். வாக்குப்பதிவின்போது சில  வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனுக்குடன் மண்டல அலுவலர்களுக்கு தெரிவித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி செய்திடும் நடவடிக்கையை முறையாக தெரிந்து கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக வாக்குச்சாவடி பூத் ஏஜென்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு சரியான நேரத்தில் தொடங்கி முடிப்பதை வாக்குச்சாவடி அலுவலர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். அதேபோன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பூஜ்யம் காட்டுகிறதா என்பதை பூத் ஏஜன்டுகள் முன்னிலையில் காண்பிக்க வேண்டும்.வாக்குப்பதிவின்போது மாலை 5 மணிக்கு பிறகு வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு  வரிசையின் கடைசி நபரிடமிருந்து டோக்கன் வழங்கிட வேண்டும். அதேபோன்று  கொரோனா பாதித்த வாக்காளர்களுக்கு 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து அவர்கள் வாக்களிப்பதை அலுவலர்கள் கண்காணித்து அதனை முறையாக செய்ய வேண்டும். எந்த ஒரு நபருக்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாக செயல்படுவது குறித்து புகார்கள் எழாத வண்ணம் நடுநிலையுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த ஆய்வில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏகராஜ், பரந்தாமன், லதா, வருவாய் கோட்டாட்சியர் சிவதாசு,  தாசில்தார்கள் பழனிராஜன், செந்தில்குமார்    மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.அதனைத்தொடர்ந்து, வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலை கல்லூரி, ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரி, சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரக்கோணம் சிஎஸ்ஐ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகளை  தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி ஐஏஎஸ் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.அரக்கோணம்: அரக்கோணம் சிஎஸ்ஐ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பில் காலையில் 150 பேர், மாலையில் 117 பேர் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்ைப நகராட்சி ஆணையாளர் லதா, வட்டார தேர்தல் பார்வையாளர், பொறியாளர் ஆசீர்வாதம், சுகாதார அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.சோளிங்கர்:  சோளிங்கர் நகராட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி  அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்பு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  நேற்று நடைபெற்றது. அதனை பார்வையிட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன்,  வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். அப்போது, தாசில்தார் வெற்றிகுமார், ஆர்ஐ சீனிவாசன், விஏஓ மணிவண்ணன், சுகாதார  ஆய்வாளர் வடிவேல் உடனிருந்தனர்.தபால் வாக்களிக்க முறையான ஏற்பாடு அரக்கோணத்தில் நடந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பை பார்வையிட்ட பிறகு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், `ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும்  8 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு 2 கட்ட பயிற்சிகள் சிறப்பாக அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு விதிமுறை அடங்கிய கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் நாளில் குறித்த நேரத்தில்  வாக்குப்பதிவு தொடங்க வேண்டும். வாக்காளர்கள் கொரோனா  விதிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். மாவட்டம் முழுவதும்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தபால் வாக்களிப்பதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’ என்றார். ஆய்வின்போது, ஆர்டிஓ சிவதாஸ், தாசில்தார் பழனிராஜன், ஆணையாளர் லதா ஆகியோர் உடனிருந்தனர்….

The post வரிசையில் காத்திருக்க வைக்க வேண்டாம் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை-கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ranipetta ,Ranipetti LFC Metric HC School ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!