×

கர்நாடகாவில் ஹிஜாப்-காவி உடை பிரச்னை பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை: துப்பாக்கிச்சூடு, கல்வீச்சு, போலீஸ் தடியடியால் பதற்றம்

பெங்களூரு: கர்நாடகாவில் மாணவ, மாணவிகள் ஹிஜாப் மற்றும் காவி சால்வை அணியும் பிரச்னை போராட்டம் கலவரமாக மாறியது. தாவணகெரே, ஷிவமொக்கா மாவட்டங்களில் மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். கர்நாடக கடலோர பகுதியில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் சிறுபான்மை வகுப்பை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்து கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனிடையில் ஹிஜாப் அணிய தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் காவி சால்வை அணிவோம் என்று சில கல்லூரிகளில் காவி சால்வை அணிந்து மாணவர்கள் வந்தனர்.கடலோர பகுதியில் தொடங்கிய சீருடை பிரச்னை நேற்று பாகல்கோட்டை, பெலகாவி, கோலார், குடகு, சாம்ராஜ்நகர், மண்டியா, தாவணகெரே, சிக்கமகளூரு, ஹாசன், யாதகிரி, கலபுர்கி என பெரும்பான்மையான மாவட்டங்களில் பரவியது. மாண்டியா நகரில் பி.ஈ.எஸ். கல்லூரியில் நுழைவு வாயிலில் மாணவர்கள் போராட்டம் நடத்தி கொண்டிருந்தபோது, ஹிஜாப் அணிந்து தனியாக வந்த மாணவியை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என மாணவர்கள் முழக்கம் எழுப்பினர். பல காவி துண்டுக்கு நடுவே தனி நபராக அல்லா ஹூ அக்பர் என்று முழக்கமிட்ட மாணவியை, விரைந்து வந்து கல்லூரி விரிவுரையாளர்கள் அழைத்து சென்றனர். பாகல்கோட்டை மாவட்டம், பனஹட்டி பகுதியில் உள்ள கல்லூரியில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்து ஹிஜாப் அணிவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கல்லூரி வளாகத்திற்கு முன் கூடி மாணவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்தை அறிந்த மாணவர்கள் கல்லூரி கேட்டை மூடிக்கொண்டு வெளியே போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்து கொண்டும் கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறும் போராட்டம் நடந்த நிலையில் திடீரென இருதரப்பினரும் ஒருவரையொருவர் கல்வீசி தாக்கிக்கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடியடி நடத்தி பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.ஷிவமொக்கா மாவட்டத்தில் நேற்று காலை இரண்டு கல்லூரிகளில் ஹிஜாப்க்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒரே சமயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எச். எஸ். ருத்ரப்பா கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் காவி துண்டு அணிந்து நேற்று கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை குறிவைத்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அவர்களுக்கு எதிராக சில மாணவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரி வளாகத்திற்குள் வந்த போலீசார், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பத்திரமாக மீட்டு வெளியேற்ற முயற்சித்த போது படிக்கட்டுகளில் மாணவர்கள் காவி துண்டு அணிந்து போலீசார் செல்ல முடியாமல் தடையை ஏற்படுத்தினர். பெரும் போராட்டத்திற்கு இடையே கல்லூரியில் இருந்து அனைத்து மாணவிகளையும் போலீசார் பத்திரமாக மீட்டு கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற்றினர். இதனிடையே கல்லூரி வளாகத்தின் மத்திய பகுதியில் காவி துண்டு அணிந்து போராட்டம் நடத்திய இந்துத்துவா மாணவர்கள் கல்லூரி கொடி கம்பத்தில் காவி கொடியை ஏற்றி திடீரென கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் மீது போலீசார் மிதமான தடியடி நடத்தி நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மறுபுறம் ஷிவமொக்கா மாநகரின் அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் க்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு மாணவர் அமைப்புகள் ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேர் எதிராக போராட்டம் நடத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் இருதரப்பிடையே பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து மாணவர்களையும் கலைந்து செல்ல நடவடிக்கை எடுத்தனர்.* தாவணகெரே மாவட்டத்தில் துப்பாக்கி சூடு:- மாநிலத்தின் தாவணகெரே மாவட்டம், ஹரிஹரா தாலுகாவில் உள்ள அரசு பியூ கல்லூரியிலும் ஓன்னேஹள்ளி தாலுகாவில் உள்ள அரசு பியூ கல்லூரியிலும் ஹிஜாப்க்கு எதிராகவும் ஆதரவாகவும் போராடிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கல்வீசி தாக்கிக்கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ேபாலீசார் மீது மாணவர்கள் கல்வீசி தாக்கினர். அவர்களை தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். அப்போது சாலையோரங்களில் நிறுத்திய வைக்கப்பட்டிருந்து பைக் உள்ளிட்ட வாகனங்களை உடைத்தும், தீ வைத்தும் மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். வேறு வழியில்லாமல் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் காரணமாக தாவணகெரே மாவட்டத்தில் இரு அரசு கல்லூரி வளாகங்கள் போர்க்களம் போல் காட்சியளித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதுடன் 144வது தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.* பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:- இதனிடையில்கல்வியமைச்சர் பி.சி.நாகேஷ், உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, மாநில போலீஸ் ஐஜி மற்றும் டிஜிபி பிரவீன்சூட் உள்பட அரசு மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுடன் முதல்வர் பசவராஜ்பொம்மை நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாட்கள் உயர்நிலை பள்ளிகள், பி.யூ, கல்லூரிகள் மற்றும் முதல்நிலை கல்லூரிகளுக்கு 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்கள் விடுமுறை விடும் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதை செய்தியாளர்களிடம் கல்வியமைச்சர் நாகேஷ், ‘ உறுதி செய்ததுடன் ஒன்று முதல் 7ம் வகுப்பு வரை வழக்கம் போல் இயக்கும். 8ம் வகுப்பு முதல் உயர்நிலை கல்லூரிகள் வரை மூன்று நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. அரசு, அரசு மானியம் ெபறும் மற்றும் மானியம் பெறாத பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை விட வேண்டும்’ என்று தெரிவித்தார்.    * ஆன்லைன் வகுப்பு நடத்துங்கள்; சித்தராமையா கோரிக்கைசித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘காவி துண்டு மற்றும் ஹிஜாப் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது சங் பரிவார் அமைப்பினர்கள். இந்த போராட்டம் அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு பரவி வருகிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏன் என்றால் மாணவர்களின் மனதில் ஜாதி மதம் பாகுபாடு விதைக்க கூடாது. இந்த நிலையினால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வரும் காரணத்தினால் உடனடியாக மாநிலம் முழுவதும் உள்ள இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது அனைத்து வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்த வேண்டும். இந்த சர்ச்சை முடிந்த பிறகு கல்லூரிகள் திறந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு தேர்வு அருகில் வருகிறது. கல்லூரியை மூடினால் அவர்கள் படிப்பு பாதிக்கப்படும். ஆகையால் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்’ என்றார்.* அமைதி காக்க வேண்டும்ஹிஜாப் அணிவது தார்மீக உரிமை என 5 மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருஷ்ண தீட்ஷீத் தலைமையிலான பெஞ்ச், ‘இந்த விஷயத்தில் மாணவர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் முழு அமைதி காக்க வேண்டும். அமைதியை சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவது ஒவ்வொருவரின் கடமை. ’ என்று கூறி, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.* ஹிஜாப் விவகாரம் திமுக வெளிநடப்புமக்களவை நேற்று மாலை 4 மணிக்கு கூடிய நிலையில், கர்நாடகாவில் கொளுந்து விட்டு எரியும் ஹிஜாப் விவகாரம் குறித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக அரசு ஒன்றிய அரசு தரப்பில் அறிக்கை தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால், அரசு தரப்பு மறுப்பு தெரிவித்த நிலையில், காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, ஜேஎம்எம், ஐயுஎம்எல் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்….

The post கர்நாடகாவில் ஹிஜாப்-காவி உடை பிரச்னை பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை: துப்பாக்கிச்சூடு, கல்வீச்சு, போலீஸ் தடியடியால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,Thavanagere ,Shivamogga ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...