×

வாடகை பாக்கி பிரச்னை குற்றாலத்தில் கடைகளுக்கு சீல்-கோயில் நிர்வாகம் அதிரடி

தென்காசி : குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான 170க்கும் மேற்பட்ட கடைகள் சன்னதி பஜார், வடக்கு சன்னதி பஜார், ரத வீதிகள், செங்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இவற்றை பல்வேறு தனி நபர்கள் கோயில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் 2016ம் ஆண்டு முதல் வாடகை கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதாகவும், வாடகையை குறைக்க வலியுறுத்தியும் வாடகைதாரர்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களை கடந்த சில வருடங்களாக நடத்தி வந்தனர்.  இதற்கிடையே தற்போது குற்றாலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று குற்றாலம் கோயில் நிர்வாக அதிகாரி கண்ணதாசன் கோயில் பணியாளர்கள் சிலருடன் வந்து செங்கோட்டை சாலையிலுள்ள கோயிலுக்குச் சொந்தமான வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை சீல் வைத்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் குற்றாலம் வர்த்தக சங்கத்தலைவர் காவையா, வழக்கறிஞர்கள் குமார் பாண்டியன், கார்த்திக் குமார், கணேஷ் தாமோதரன் உள்ளிட்டோர் திரண்டு வந்து குற்றாலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடைகள் திறக்க முடியாத சூழல் உள்ளது.வருடத்திற்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள சீசனை நம்பியே கடைகளை வைத்துள்ளனர். வாடகை அதிகமாக இருப்பதாலும் ஊரடங்கு காரணமாக வருவாய் இல்லாத காரணத்தாலும் வாடகையை கட்ட இயலவில்லை. தற்போது தேர்தல் நடைபெறும் சமயமாக உள்ளது. எனவே கடையை சீல் வைப்பதற்கு பதிலாக சற்று கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து நிர்வாக அதிகாரி கண்ணதாசன் முதலில் சீல் வைத்த சில கடைகளை மற்ற கடைகளை சீல் வைக்கும் முடிவை கைவிட்டு திரும்பிச் சென்றார். இதுகுறித்து கோயில் தரப்பில் கூறுகையில் வாடகையாக பல கோடி ரூபாய் பாக்கி உள்ளது. ஒரு சிலர் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய்க்கும் மேல் வாடகை பாக்கி வைத்துள்ளதாக தெரிவித்தனர்….

The post வாடகை பாக்கி பிரச்னை குற்றாலத்தில் கடைகளுக்கு சீல்-கோயில் நிர்வாகம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Courtalam Courtalanathar Swamy Temple ,Sannadi Bazaar ,North ,Sannati Bazaar ,Temple ,Courtalam ,Dinakaran ,
× RELATED குற்றால அருவிகளில் வெள்ளம்: எச்சரிக்கை கருவி அமைப்பு