×

இந்தியாவின் இசைக்குயில் என போற்றப்பட்ட லதா மங்கேஷ்கர் காலமானார்: அரசு மரியாதையுடன் மும்பையில் உடல் தகனம்; பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி

மும்பை: இந்தியாவின் இசைக்குயில் என போற்றப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், மும்பையிலுள்ள மருத்துவமனையில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 92. மும்பையில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உட்பட அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், ரசிகர்களால் ’இசைக்குயில்’ என்று அழைக்கப்பட்டவருமான லதா மங்கேஷ்கர் (வயது 92), கடந்த மாதம் 8ம் தேதி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐசியூ.வில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு நிமோனியா காய்ச்சல் உள்ளதும் கண்டறியப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, அவரது உடல் நிலையில் முன்ேனற்றம் காணப்பட்டது. கடந்த மாதம் 28ம் தேதி அவருக்கு வென்டிலேட்டர் கருவிகள் அகற்றப்பட்டன. கொரோனா பாதிப்பு லேசானதாக இருந்ததாகவும், கொரோனாவில் இருந்து முழுமையாக அவர் குணம் அடைந்து விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இருப்பினும், வயது முதிர்வு காரணமாக மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையே, லதா மங்கேஷ்கரின் உடல் நிலை நேற்று முன்தினம் திடீரென மோசம் அடைந்தது. மீண்டும் வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை 8.12 மணிக்கு காலமானதாக, மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. பல்வேறு உடல் உறுப்புகள் செயல் இழந்ததால், அவர் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். முன்னதாக, லதா மங்கேஷ்கரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதை அறிந்ததும் நேற்று முன்தினம் இரவு முதலே அரசியல் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் மருத்துவமனைக்கு நேரில் வந்து, அவரது குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தனர். பிரதமர் மோடி சார்பில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், பிரீச்கேண்டி மருத்துவமனைக்கு வந்து லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினரை சந்தித்தார்.லதா மங்கேஷ்கரின் மறைவுச் செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல், திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் ஒன்றிய, மாநில அமைச்சர்கள், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர். லதா மங்கேஷ்கரின் நினைவாக நேற்றும், இன்றும் தேசிய துக்கம் தினம் அனுசரிக்க ஒன்றிய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டது. இந்த 2 நாட்களும் லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதுபோல், ஒரு நாள் துக்க நாளாக அனுசரிப்பதாகவும், இதையொட்டி இன்று ஒரு நாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்படுவதாகவும் மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து, லதா மங்கேஷ்கரின் உடல் நேற்று மதியம் 12.30 மணிக்கு பிரீச் கேண்டி  மருத்துவமனையில் இருந்து பெட்டர் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மாலை 3  மணி வரை அவரது உடல் அங்கு வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக அவரது வீட்டுக்கு படையெடுத்து வந்தனர். தேசியக்கொடி போர்த்தப்பட்டு, ராணுவ வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பொதுமக்கள் இறுதி அஞ்சலி ெசலுத்துவதற்கான ஏற்பாடுகள் மாநில போலீசார் சார்பில் துரிதகதியில் செய்யப்பட்டன. நேற்று மாலை 6.30 மணியளவில் சிவாஜி பார்க் அருகில் அவரது உடல் பூரண அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. லதா மங்கேஷ்கரின் சகோதரர் ஹிருதய நாத் மங்கேஷ்கர் சிதைக்கு தீ மூட்டினார். சிவாஜி பார்க்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். லதா மங்கேஷ்கர் உறவினர்களுக்கு மோடி ஆறுதல் கூறினர்.  இதுபோல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, நடிகர் அமிதாப் பச்சன், எழுத்தாளர் ஜாவேத் அக்தர், பாடகி அனுராதா பண்ட்வால், திரைப்படத் தயாரிப்பாளர் மாதுர் பண்டர்கர், சித்தார்த் ராய் கபூர், ஷாரூக்கான், ஷாரூக் மகன் ஆர்யன் கான், ரன்பீர் கபூர், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட அரசியல், திரையுலகம் உட்பட பல்வேறு துறை பிரபலங்கள் மரியாதை செலுத்தினர். லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: லதா மங்கேஷ்கரின் மரணம், உலகம் முழுவதிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை போல எனது இதயத்தையும் சுக்குநூறாக்கி விட்டது. அவர் இறந்தாலும் அவருடைய மெல்லிய குரல் சாகாவரம் பெற்றது. அது, என்றென்றும் கோடானு கோடி ரசிகர்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு: லதா மங்கேஷ்கரின் மறைவால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அவரின் மறைவால், இந்தியா தனது குரலை இழந்து விட்டது.பிரதமர் நரேந்திர மோடி: நான் சொல்லொணா துயரத்தில் உள்ளேன். அன்பான, கனிவான லதா நம்மோடு இல்லை. அவர் நமது தேசத்தில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கி பிரிந்துள்ளார். ஈடு இணையற்ற காந்தக் குரலுடன் மக்களை வசீகரித்த, இந்திய கலாசாரத்தின் சின்னமாக திகழ்ந்த  இவரை வருங்கால தலைமுறையினர் நினைவில் கொள்வார். அவரிடம் நான் அளவற்ற பாசத்தை பெற்றிருந்ததை பெருமையாக கருதுகிறேன்.  அவருடனான எனது தொடர்பு மறக்க முடியாததாக இருக்கும்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: லதா மங்கேஷ்கரின் மனதை மயக்கும் இனிய மெல்லிசை குரல் அமைதியாகி விட்டது என்று அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரின் மறைவால் ஒரு சகாப்தமே முடிவுக்கு வந்துள்ளது. மனதை தொடும் அன்னாரின் தேசபக்தி பாடல்கள், பல தலைமுறைகளுக்கு உத்வேகத்தை தரும்.ராகுல் காந்தி: லதா மங்கேஷ்கரின் தங்கக் குரல் மறையாது. அது சாகாவரம் பெற்றது. அந்த குரல் பல சகாப்தங்களுக்கு அன்னாரின் ரசிகர்களின் இதயத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.* 30,000 பாடல்கள்லதா மங்கேஷ்கர் தனது 13 வயதில் பாடல்கள் பாடத் தொடங்கினார். 1942ல் முதல் பாடலைப் பதிவு செய்தார். பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். 1999ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட லதா மங்கேஷ்கருக்கு 2001ல் இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது. 2001ல் மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் என்ற மருத்துவமனையை புனேவில் நிறுவிய அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. …

The post இந்தியாவின் இசைக்குயில் என போற்றப்பட்ட லதா மங்கேஷ்கர் காலமானார்: அரசு மரியாதையுடன் மும்பையில் உடல் தகனம்; பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Latha Mangeshkar ,India ,Mumbai ,Modi ,
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...