×

பசுந்தேயிலை வரத்து உயர்வால் தேயிலை தூள் உற்பத்தி அதிகரிப்பு

மஞ்சூர், ஆக. 4: குந்தா பகுதியில் பசுந்தேயிலை வரத்து உயர்ந்துள்ளதால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலை தூள் உற்பத்தி அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக உள்ளது. மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு ஆலைகள் இயங்கி வருகிறது. இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் எஸ்டேட்டுகளுக்கு சொந்தமான தொழிற்சாலைகளும் உள்ளது. நடப்பாண்டு துவக்கத்தில் இருந்து 4 மாதங்களுக்கும் மேலாக போதிய மழை பெய்யாததால் வறட்சி நிலவியது. இதனால், தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்ததால் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு குறைந்து போனது. தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதலும் ஏற்பட்டது. இதன்காரணமாக தொழிற்சாலைகளில் தேயிலை தூள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் பரவலாக நல்ல மழை பெய்தது. இடை, இடையே நல்ல வெயிலும் காணப்பட்டது. தேயிலை விவசாயத்திற்கேற்ற சீதோஷ்னநிலை காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்தது.

இதை தொடர்ந்து பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கும் தினசரி 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கிலோவிற்கும் மேல் பசுந்தேயிலை வரத்து காணப்பட்டது. பசுந்தேயிலை வரத்து அதிகரித்ததால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலை உற்பத்தியும் கூடியது. இந்நிலையில், கடந்த மாதம் மழை பெய்வது முற்றிலுமாக ஓய்ந்து போன நிலையில் பலத்த சூறாவளி காற்று வீசியது பலத்த காற்று காரணமாக செடிகளில் உள்ள அரும்புகள் ஒடிந்து தேயிலை மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், காற்றின் தாக்கம் குறைந்ததாலும் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக கடந்த சில தினங்களாக மீண்டும் பசுந்தேயிலை வரத்து உயர்ந்துள்ளது. மஞ்சூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினசரி 16 ஆயிரம் முதல் 18 ஆயிரம் கிலோ வரை பசுந்தேயிலை வரத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளில் தேயிலை தூள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

The post பசுந்தேயிலை வரத்து உயர்வால் தேயிலை தூள் உற்பத்தி அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kuntha ,Neelgiri district ,Mahalinga ,Italian ,West Country ,Dinakaran ,
× RELATED வனச்சாலையில் இரவு நேரத்தில் யானைகள் நடமாட்டம்