×

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் தேமுதிக பிரசாரத்தை தொடங்கினார் பிரேமலதா

சென்னை: தேமுதிக சார்பில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி, உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் பிரசாரம் மற்றும் விஜயகாந்த் ரத யாத்திரை நேற்று தொடங்கியது. முன்னதாக, விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா நேற்று மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பிரசாரம், கும்மிடிப்பூண்டியில் தொடங்கி, கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதும் 3 கட்ட பயணமாக நடைபெற உள்ளது. முதற்கட்ட பயணம் இன்று (நேற்று) ெதாடங்கி, வரும் 23ம் தேதி வரை நடக்கிறது.

2ம் கட்ட பயணம் குறித்து விரைவில் அறிவிப்போம். விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 24ம் தேதி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். எங்கள் பிரசாரத்தின் நோக்கம், காலையில் எங்கள் நிர்வாகிகள் சந்திப்பு, மாலையில் ரத யாத்திரையோடு மக்கள் சந்திப்பு நடைபெறும். பிரசாரமும், நடைபயணமும், ரத யாத்திரையும் கலந்த ஒரு பயணமாக இருக்கும். கூட்டணி முடிவு செய்யாமல் பிரசாரத்தில் என்ன பேசுவார்கள், யாரை திட்டுவார்கள், என்ன குறை சொல்வார்கள் என நினைக்கலாம். திட்டுவது, குறை சொல்வது மட்டுமே அரசியல் இல்லை.

நாங்கள் இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நட்பின் அடிப்படையில் விஜயகாந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை வந்து சந்தித்திருக்கிறார். தற்போது, முதல்வருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால், நாங்களும் நட்பு ரீதியாக அரசியல் நாகரிகம் கருதி அவரை சந்தித்து நலம் விசாரித்தோம். விஜயகாந்த் கனவு, கொள்கை, லட்சியத்தை மக்களிடையே சென்று சேர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் தேமுதிக பிரசாரத்தை தொடங்கினார் பிரேமலதா appeared first on Dinakaran.

Tags : Premalatha ,DMDK ,Ullam ,Chennai ,Thedi Illam ,Vijayakanth ,Rath Yatra ,2026 assembly elections ,Ullam Thedi Illam Nadi ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...