மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள நகை, பணத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ரயில் நிலையத்தின் பார்சல் அலுவலகம் அருகே நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமான வகையில் டிராலி பேக்குடன் 2 பேர் சுற்றி திரிந்தனர். ரயில்வே போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் ரயில்வே காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர்கள் அஜித்குமார், சாபூஜேக்கப் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில், பிடிபட்டவர்களில் ஒருவர் மராட்டிய மாநிலம், சங்கிலி மாவட்டத்தில் உள்ள பரே கிராமத்தை சேர்ந்த ஹரிதாஸ் சலுங்கே (21) என்றும், இவர் கோவில்பட்டி தெற்கு பஜாரில் நகைக்கடை நடத்தி வருவதும், மற்றொருவர் கோவில்பட்டி செக்கடி தெருவைச் சேர்ந்த சந்தனராஜ் (29) என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த டிராலி பேக்கை சோதனை செய்ததில் ரூ.500 நோட்டு கட்டுகளும், தங்க நகைகளும் இருந்தன. இதுகுறித்து மதுரை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மண்டல வருமான வரி புலனாய்வு பிரிவு துணை இயக்குனர் தலைமையில் ஆய்வாளர்கள் மதுரை ரயில்நிலையத்திற்கு வந்து பணம் மற்றும் தங்கத்தை ஆய்வு செய்தனர். இதில், ரூ.72 லட்சம் ரொக்கம், ரூ.41 லட்சத்து 22 ஆயிரம் மதிப்புள்ள 450 கிராம் தங்க நகை, ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள 26 கிராம் வெள்ளி நகைகள் என ஒரு கோடியே 16 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் இருந்தன. அவைகளை பறிமுதல் செய்த வருமானவரித்துறையினர், இருவரையும் மேல் விசாரணைக்காக மதுரை பீ.பி.குளத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் மதுரை ரயில் நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post மதுரை ரயில் நிலையத்தில் ரூ.1.17 கோடி மதிப்பு நகைகள் பணத்துடன் 2 பேர் சிக்கினர்: வருமான வரித்துறை தீவிர விசாரணை appeared first on Dinakaran.
