- முதல் அமைச்சர்
- அமைச்சர்
- அன்பில் மஹேஸ்போய்யாமோஷி
- காரைக்குடி
- அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி
- காரைக்குடி, சிவகங்கை
- தின மலர்
காரைக்குடி: முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு நிதி உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலை பள்ளியின் 75ம் ஆண்டு பவளவிழா நேற்று கொண்டாடப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:
இப்பள்ளி போன்று அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் அரசின் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், எம்எல்ஏ மாங்குடி, துணைவேந்தர் ரவி ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிகல்வித் துறை சார்ந்த கூட்டம் வரும் 8ம் தேதி நடக்கவுள்ளது. அதில் இந்த கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்க கலைத்திருவிழா உள்பட பள்ளிகல்வித்துறை சார்பில் திறன்களை வளர்க்க பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். விளையாட்டு போட்டி, வினாடி – வினா என போட்டிகள் நடத்தப்பட்டு அதில் இருந்து தேர்வு பெறும் 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி என பலநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
விமான நிலையமே செல்லாத கிராமத்து மாணவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பால் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்ற மாணவர்கள் இன்று கிராமங்களில் பேசும் பெருளாக உள்ளனர். படிப்புக்கு தடையாக எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறும் முதல்வரை நாம் பெற்றுள்ளோம். அவர் வழியில் பள்ளிக்கல்வித் துறை இன்னும் பல சாதனைகளை படைக்கும். இவ்வாறு கூறினார்.
The post முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% ஒதுக்கீடு: அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி உறுதி appeared first on Dinakaran.
