×

அண்ணாநகரில் பூட்டிய வீட்டிற்குள் சிபிஎஸ்இ பள்ளி மண்டல இயக்குனர் மர்ம மரணம்

சென்னை: அண்ணாநகரில் பூட்டிய வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிபிஎஸ்இ பள்ளி மண்டல இயக்குனர் உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் மகேஷ் டி.தர்மாதிகாரி (57). சிபிஎஸ்இ பள்ளியின் மண்டல இயக்குனராக கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, திருமங்கலத்தில் உள்ள சிபிஎஸ்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவரது குடும்பத்தினர் மகாராஷ்டிராவில் வசித்து வரும் நிலையில், இவர் மட்டும் சென்னை அண்ணாநகர் ஐ பிளாக்கில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, பணி முடிந்து இவர் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்று மதியம் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் இவர் பங்கேற்க இருந்தார். அவரை அழைத்துச் செல்ல, பள்ளி ஊழியர் தண்டாயுதபாணி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த தண்டாயுதபாணி திருமங்கலத்தில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், சிபிஎஸ்இ உதவி செயலர் பரமசிவம் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் தரையில் மகேஷ் இறந்து கிடந்தது தெரிந்தது. உடனே, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருமங்கலம் போலீசார் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, இவரது வீட்டுக்கு யாராவது வந்தார்களா என அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், இவரிடம் கடைசியாக செல்போனில் பேசிய நபர்கள், பணிச்சுமை இருந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

The post அண்ணாநகரில் பூட்டிய வீட்டிற்குள் சிபிஎஸ்இ பள்ளி மண்டல இயக்குனர் மர்ம மரணம் appeared first on Dinakaran.

Tags : CBSE ,Annanagar ,Chennai ,CBSE school ,Mahesh T. Dharmadhikari ,Maharashtra ,Thiruvananthapuram, Kerala… ,
× RELATED குமரி: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து