- மக்களவைத் தேர்தல்
- ராகுல் காந்தி
- புது தில்லி
- 2024 லோக் சபா தேர்தல்கள்
- காங்கிரஸ்
- தில்லி
- மக்களவை
- தின மலர்
புதுடெல்லி: தேர்தல் அமைப்பு ஏற்கனவே செத்து விட்டதாக கூறியிருக்கும் ராகுல் காந்தி, 2024 மக்களவை தேர்தலில் 100 தொகுதிகளில் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் நேற்று நடந்த காங்கிரஸ் சட்ட மாநாட்டை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்து பேசியதாவது:
இந்தியாவில் தேர்தல் முறை ஏற்கனவே செத்து விட்டது. பிரதமர் மோடி மிகக்குறைந்த பெரும்பான்மையை மட்டுமே கொண்டுள்ளார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மக்களவை தேர்தலில் 10 முதல் 15 இடங்களில் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் உண்மையான எண்ணிக்கை 80 முதல் 100 தொகுதிகளாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்த மோசடி மட்டும் செய்யப்படாமல் இருந்திருந்தால், மோடி பிரதமராகி இருக்க முடியாது.
அடுத்த சில நாட்களில் மக்களவை தேர்தலில் எப்படி மோசடி செய்ய முடியும், அது எவ்வாறு செய்யப்பட்டது என்கிற தகவல்களை எந்த சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்கப் போகிறோம். கர்நாடகாவில் ஒரு சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை ஆய்வு செய்தோம். அதில், மொத்தம் 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் வாக்குகள் மோசடி என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அரசியலமைப்பை பாதுகாக்கும் தேர்தல் ஆணையம் அழிக்கப்பட்டு, கையகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக தேர்தல் முறைகேடு பற்றி நான் பேசி வருகிறேன். ஏதோ தவறு நடப்பதாக எனக்குள் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் மிகுந்த சந்தேகம் இருந்தது. மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. மபி, குஜராத்திலும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மகாராஷ்டிரா தேர்தலுக்குப் பிறகு மிகவும் உன்னிப்பாக கண்காணித்து முறைகேடுகளை கண்டறிந்துள்ளோம்.
இதற்கு முன், என்னிடம் ஆதாரம் இல்லை, அதனால் வெளிப்படையாக பேச முடியவில்லை. இப்போது நம்பிக்கையுடன் கூறுகிறேன். ஏனென்றால் என்னிடம் 100 சதவீத ஆதாரம் உள்ளது. இதை யாரிடம் காட்டினாலும் அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்கிறார்கள். ஆனால் இது சாத்தியமாகி இருக்கிறது, உண்மையில் நடந்திருக்கிறது. இந்தத் தரவை நாங்கள் வெளியிடும் போது, தேர்தல் அமைப்பில் ஏற்படும் அதிர்ச்சி அலையை நீங்கள் காண்பீர்கள். இது உண்மையில் ஒரு அணுகுண்டு போன்றது. இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் முற்றுகைக்கு ஆளாகி உள்ளது: சோனியா காந்தி கடும் தாக்கு
“இந்திய அரசிலமைப்பு சட்டம் முற்றுகைக்கு ஆளாகி உள்ளது” என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். அவர் பேசுகையில், “இந்திய அரசியலமைப்பு சட்டம் தற்போது முற்றுகைக்கு ஆளாகி உள்ளது. சுதந்திரத்துக்காகவோ அல்லது சமத்துவத்தை நிலைநாட்டவோ ஒருபோதும் போராடாத பாஜ ஆர்எஸ்எஸ் ஆகியவை இந்திய அரசியலமைப்பை தொடர்ந்து தகர்த்து வந்தன. தற்போதும் அதை செய்ய அரசு அதிகாரத்தை பாஜ பயன்படுத்துகிறது.
அவர்களின் சித்தாந்த முன்னோர்கள் மனுஸ்மிருதியை மகிமைப்படுத்தினர். மூவர்ண கொடியை நிராகரித்தனர். மேலும், ஜனநாயகம் வெற்றுத்தனமானது என்றும், பாகுபாடு என்பது சட்டம் என்றும் வலியுறுத்தி வந்தனர். இந்து ராஷ்டிராவை உருவாக்க முயன்றனர். இப்போது அவர்கள் சம குடியுரிமை பற்றிய அம்பேத்கரின் சோஷியலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை அழிக்க முயல்கின்றனர். இது சீர்திருத்தம் அல்ல. நமது ஜனநாயக குடியரசை சக்தி வாய்ந்த சிலருக்கு சேவை செய்யும் ஒரு தேவராஜ்ய பெருநிறுவன அரசாக மாற்றுவதன் மூலம் ஒரு சித்தாந்த சதியை கொண்டு வர பாஜ முயற்சிக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
நான் ராஜாவாக விரும்பவில்லை
டெல்லியில் அரசியலமைப்பு சவால்கள், கண்ணோட்டங்கள் மற்றும் பாதைகள் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பார்வையாளர்கள் ராகுல்காந்தியை நோக்கி இந்த நாட்டின் ராஜா எப்படி இருக்க வேண்டும்? அவர் ராகுல்காந்தி போல இருக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, ‘‘நான் முதலாளி இல்லை. நான் ராஜா இல்லை. நான் ஒரு ராஜாவாக விரும்பவில்லை. நான் ராஜாவை எதிர்க்கிறேன். அந்த கருத்தாக்கத்தையே எதிர்க்கிறேன்” என்றார்.
ராகுல்காந்தி துணிச்சலுடன் குண்டை வெடிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் சவால்
பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘ராகுல்காந்தி தன்னிடம் ஒரு அணுகுண்டு இருப்பதாக கூறுகிறார். அப்படியானால் அதை உடனடியாக வெடிக்க வைக்க வேண்டும். தன்னை அவர் ஆபத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும். அவரது கடந்த கால வார்த்தை ஜாலங்களை நாடு நினைவில் வைத்திருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் கேள்விக்கு இடமில்லாத நேர்மைக்கான நற்பெயரைக் கொண்ட ஒரு நிறுவனமாகும். மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. அரசியலமைப்பு குறித்து அற்புதமான அறிக்கைகளை வெளியிடுவது எதிர்க்கட்சி தலைவருக்கு பொருத்தமானது அல்ல” என்றார்.
அருண்ஜெட்லி என்னை மிரட்டினார்: ராகுல்
ராகுல்காந்தி கூறுகையில், ‘நான் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடியபோது நடந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் இப்போது இங்கு இல்லை. எனவே நான் அதனைக்கூறக்கூடாது. ஆனால் நான் அதை சொல்கிறேன். என்னை அச்சுறுத்துவதற்காக அருண்ஜெட்லி அனுப்பப்பட்டார். நீங்கள் இந்த பாதையில் சென்று அரசுக்கு எதிராக விவசாய சட்டங்கள் தொடர்பாக எங்களுடன் போராடினால் நாங்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறினார். நான் அவரது முகத்தை பார்த்து நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. ஏனென்றால் நாங்கள் காங்கிரஸ் கட்சியினர். நாங்கள் கோழைகள் அல்ல. நாங்கள் யாருக்கும் ஒருபோதும் வளைந்து கொடுக்க மாட்டோம். ஆங்கிலேயர்களால் கூட எங்களை வளைக்க முடியவில்லை. நீங்கள் யார்? என்று கேட்டேன்’ என்றார்.
போலி செய்தி என பாஜ மறுப்பு: இந்நிலையில் இதனை பாஜ மறுத்துள்ளது. இதுகுறித்து பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் தள பதிவில், ‘‘போலி செய்தி எச்சரிக்கை. அருண் ஜெட்லி 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி காலமானார். விவசாய மசோதாக்கள் வரைவு 2020ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த அருண்ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி கூறுகையில்,’ராகுல் காந்தி இப்போது விவசாயச் சட்டங்கள் தொடர்பாக எனது தந்தை அருண் ஜெட்லி மிரட்டியதாகக் கூறுகிறார். அவருக்கு நினைவூட்டுகிறேன், என் தந்தை 2019 இல் காலமானார். விவசாயச் சட்டங்கள் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. மிக முக்கியமாக, எதிர்க்கும் பார்வையில் யாரையும் அச்சுறுத்துவது என் தந்தையின் இயல்பில் இல்லை. அவர் ஒரு தீவிர ஜனநாயகவாதி. முன்னாள் அமைச்சர் மனோகர் பாரிக்கர் மீதும் இதே குற்றச்சாட்டை ராகுல் முன்வைத்தார். நம்முடன் இல்லாதவர்களை நினைவில் வைத்து ராகுல் காந்தி பேசுவதை நான் பாராட்டுகிறேன். அதே சமயம் மறைந்தவர்கள் நிம்மதியாக இளைப்பாறட்டும்’ என்றார்.
The post தேர்தல் அமைப்பு ஏற்கனவே செத்து விட்டது மக்களவை தேர்தலில் 100 தொகுதிகளில் மோசடி: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
