×

மாநிலங்களவையில் எம்பிக்களை தடுத்து நிறுத்திய சிஐஎஸ்எப் வீரர்கள்: எதிர்க்கட்சி தலைவர் கார்கே கண்டனம்

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டு அவையின் மைய பகுதிக்கு சென்றனர். அப்போது அவர்களை சிஐஎஸ்எப் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் சார்பில் மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதி உள்ளார்.

அதில், மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக உரிமையான போராட்டத்தை பயன்படுத்தும் போது ஒன்றிய தொழிலக பாதுகாப்பு படை(சிஐஎஸ்எப்) வீரர்கள் சபைக்குள் ஓடி வந்ததை கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன். இதை நேற்றும்(நேற்றுமுன்தினம்) இன்றும்(நேற்று) பார்த்தோம். நமது நாடாளுமன்றம் இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதா? இது மிகவும் ஆட்சேபனைக்குரியது. இதை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம்.

உறுப்பினர்கள் பொது மக்களின் முக்கிய பிரச்னைகளை எழுப்பும்போது, எதிர்காலத்தில் சிஐஎஸ்எப் வீரர்கள் அவையின் மையப்பகுதிக்குள் படையெடுக்க மாட்டார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் கொறடாவான ஜெய்ராம் ரமேஷ், எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், மாநிலங்களவை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த பிறகு மாநிலங்களவை அறையை சிஐஎஸ்எப் வீரர்கள் கைப்பற்றியதை இப்போது காண்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

திரிணாமுல் எம்பி டெரிக் ஓ பிரையன் பதிவிடுகையில், மாநிலங்களவைக்குள் சிஐஎஸ்எப் வீரர்கள் அனுமதிக்கப்பட்டது இதுவரை நடந்திராத ஒன்று. திரிணாமுல்,திமுக மற்றும் ஆம் ஆத்மி எம்பிக்கள் அவையின் மைய பகுதிக்கு செல்வதை தடுக்கும் வகையில் வீரர்கள் நின்றிருந்தனர். சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்கு திருட்டு , மோடி-ஷா, முடிவு காணும் வரை போராடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

* அமைச்சர் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து பேசிய நாடாளுமன்ற விவகாரதுறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ,‘‘ மாநிலங்களவை எம்பிக்கள் சிலர் அவை நடவடிக்கைகளை இடையூறு செய்யும் விதமாக ஆவேசமாக நடந்து கொண்டனர். இதனால் அவர்களை தடுக்க காவலர்கள் நிறுத்தப்பட்டனர். அவையில் பாதுகாப்பு வீரர்களை நிறுத்தியது ஒன்றிய அரசின் முடிவு அல்ல. அது சம்மந்தப்பட்ட இரு அவைகளின்(மக்களவை,மாநிலங்களவை) தலைவர்கள் எடுத்த முடிவு ஆகும். இது தொடர்பாக அவை தலைவருடன் விவாதிக்கப்படும்’’ என்றார்.

The post மாநிலங்களவையில் எம்பிக்களை தடுத்து நிறுத்திய சிஐஎஸ்எப் வீரர்கள்: எதிர்க்கட்சி தலைவர் கார்கே கண்டனம் appeared first on Dinakaran.

Tags : CISF ,Rajya Sabha ,Opposition Leader ,Kharge ,New Delhi ,House ,Dinakaran ,
× RELATED ஓடிபி இல்லாமல் ஹேக்கிங் வாட்ஸ்...