×

அரசு திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம்: ஐகோர்ட்டில் அரசு வாதம்

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் மற்றும் தென் சென்னை வடக்கு மேற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெ.எச்.இனியன் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே பொது நல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அரசு முத்திரை இடம்பெற்றுள்ள நிலையில், அதில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் புகைப்படமும், முதல்வரின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.எனவே, அந்த விளம்பரத்தில் கலைஞரின் புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்,’ என்று கோரியிருந்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்ஸ்வா மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாரயண்,‘அரசின் விளம்பரங்களில் அரசியல் கட்சி தலைவர் சின்னங்கள் இடம்பெறக்கூடாது. அரசு பணத்தில் செய்யப்படும் திட்ட விளம்பரத்தில் முதல்வரின் பெயர் ஸ்டாலின் என்பதை பயன்படுத்த கூடாது. அதேபோல ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கப்பட உள்ள மருத்துவ திட்டத்திற்கும் ஸ்டாலின் பெயர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்,’ என்று வாதிட்டார்.

அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி,‘அரசுத் திட்ட விளம்பரங்களை முதலமைச்சர் படம் மட்டுமல்ல துறை அமைச்சர்களின் படங்களை பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள தலைவர்களின் படங்கள் மற்றும் கட்சியின் சின்னம் கொண்ட விளம்பரம் அரசு விளம்பரம் அல்ல. உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே அரசு விளம்பரங்களின் நடைமுறை பின்பற்றப்படும்,’ என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை முறையாக பின்பற்ற வேண்டும். இந்த வழக்கு குறித்து தமிழக அரசு, தேர்தல் ஆணையம், திமுக ஆகியோர் பதிலளிக்க வேண்டும். அதேசமயம் ஆகஸ்ட் 2ம் தேதியன்று நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ திட்டம் தொடங்க தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

The post அரசு திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம்: ஐகோர்ட்டில் அரசு வாதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,Tamil Nadu government ,Madras High Court ,Supreme Court ,AIADMK Rajya Sabha ,C.V. Shanmugam ,South Chennai North West District ,AIADMK Lawyers' Unit… ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...