×

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பகீர் தகவல்; மாயமான 23,000 சிறுமிகள், பெண்கள் எங்கே?: 1,500 பாலியல் குற்றவாளிகள் தலைமறைவு

போபால்: மத்திய பிரதேசத்தில் 23,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் மாயமாகியுள்ளதாகவும், பாலியல் குற்றங்களில் தொடர்புடைய 1,500க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் மாநில அரசே சட்டப்பேரவையில் ஒப்புக் கொண்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த சட்டமன்ற உறுப்பினருமான பாலா பச்சன், சட்டப்பேரவையில், ‘2024 ஜனவரி 1 முதல் 2025 ஜூன் 30 வரை, மாவட்டம் வாரியாக காணாமல் போன பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளின் நிலை, கைது செய்யப்பட்ட மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் விவரங்கள் குறித்து விரிவான விளக்கம் வேண்டும்.

மேலும், கடமை தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?’ என்று அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த பாஜக முதல்வர் மோகன் யாதவ், அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அதன்படி, 2025 ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் 21,175 பெண்களும், 1,954 சிறுமிகளும் என மொத்தம் 23,129 பேர் ஓராண்டுக்கும் மேலாகக் காணாமல் போயுள்ளனர். பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 292 பேரும், சிறுமிகளை வன்கொடுமை செய்த 283 பேரும் என மொத்தம் 575 பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இதுமட்டுமின்றி, பெண்கள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் 443 பேரும், சிறுமிகள் மீதான வழக்குகளில் 167 பேரும் என 610 குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி உள்ளனர்’ என்றார். மொத்தமாக, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான கொடூரக் குற்றங்களில் தொடர்புடைய 1,500க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

The post பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பகீர் தகவல்; மாயமான 23,000 சிறுமிகள், பெண்கள் எங்கே?: 1,500 பாலியல் குற்றவாளிகள் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Pradesh ,Bhopal ,Madhya Pradesh ,Former ,Chief Minister of ,Madhya Pradesh… ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...