×

12 ஆயிரம் ஊழியர்கள் டிஸ்மிஸ் அறிவிப்பு எதிரொலி டிசிஎஸ் பங்கு சரிவால் ரூ.28,149 கோடி இழப்பு: இந்திய ஐடி துறையில் பெரும் பதற்றம்

மும்பை: ஆட்குறைப்பு அறிவிப்பால் டிசிஎஸ் பங்குகள் கடந்த 2 நாட்களாக சரிவை கண்டுள்ள நிலையில், ரூ.28,149 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள தனது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் 12,261 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது செயல்திறன் குறைபாடு காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை என்றும், நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பகுதியாகவே ஆட்குறைப்பு நடைபெறுகிறது என்றும் டிசிஎஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இன்போசிஸ், விப்ரோ போன்ற பிற முக்கிய இந்திய நிறுவனங்களும் இதேபோன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் ஊழியர்களிடையே பரவி, இந்திய ஐடி துறையில் பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பை வெளியான உடனேயே இந்திய பங்குச்சந்தையில் அதன் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்தன. இதன் காரணமாக, ஒரே நாளில் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் சுமார் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டு, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்றும் இந்த நிலை நீடித்தது. நேற்று வர்த்தகம் தொடங்கியபோதும் பங்குகளின் வீழ்ச்சி நீடித்தது. குறிப்பாக, வர்த்தகம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களிலேயே, முதலீட்டாளர்களின் முதலீடு மேலும் ரூ.6,550 கோடி கரைந்தது. இந்த தொடர் சரிவின் விளைவாக, டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.11.07 லட்சம் கோடியாகக் குறைந்தது. ஆட்குறைப்பு அறிவிப்பால், இரண்டு நாட்களில் மட்டும் டிசிஎஸ் பங்குகள் ரூ.28,149 கோடி இழப்பை சந்தித்து உள்ளன. தற்போது டிசிஎஸ் மொத்த சந்தை மதிப்பு ரூ.11,05,886.54 கோடியாக உள்ளது.

* டிசிஎஸ் சிஇஓவுக்கு ரூ.26 கோடி சம்பளமா?
டிசிஎஸ்சில் இருந்து 12 ஆயிரம் ஊழியர்கள் நீக்கப்படும் நிலையில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி கே. கிருத்திவாசன் ஆண்டுக்கு ரூ.26 கோடிக்கு மேல் ஊதியம் பெறுவது இணையதளத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருத்திவாசனின் அடிப்படை சம்பளமாக ரூ.1.39 கோடி, சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளாக ரூ.2.12 கோடி, கமிஷன்களாக ரூ.23 கோடி ஆகியவையும் இதில் அடங்கும். 2025 நிதியாண்டிற்கான அவரது மொத்த சம்பளம் ரூ.26.52 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post 12 ஆயிரம் ஊழியர்கள் டிஸ்மிஸ் அறிவிப்பு எதிரொலி டிசிஎஸ் பங்கு சரிவால் ரூ.28,149 கோடி இழப்பு: இந்திய ஐடி துறையில் பெரும் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : TCS ,Mumbai ,India ,Tata Consultancy Services ,US ,Canada… ,Dinakaran ,
× RELATED மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்...