×

கங்கை கொண்ட சோழனிடம் விஸ்வகுரு பாடம் படிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி பேச்சு

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் நடந்த விவாதத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி பேசியதாவது: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது எதிர்க்கட்சிகளுக்கு தேசப்பற்று இல்லை என்று குறிப்பிட்டார். நாங்கள் எப்போதும் இந்த நாட்டுக்காகவே நிற்கிறோம். நாட்டின் ஒற்றுமைக்காகவே நிற்கிறோம். காங்கிரஸ் நண்பர்களை விட அதிகமாக நேருவைப் பற்றி பேசியது நீங்கள் தான். அதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். உங்களால் தான் தமிழ்நாட்டில் பல இளைஞர்களும் பெரியாரைப் பற்றியும் அம்பேத்கரை பற்றியும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று உலகம் முழுவதிலும் இருக்கும் பல இளைஞர்களும் ஜவஹர்லால் நேரு இந்த நாட்டுக்கு என்ன செய்தார் என்பதை தேடிப் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் நீங்கள்தான்.

நீங்கள் செய்யும் எல்லா தவறுகளுக்கும் நேருதான் காரணம் என்கிறீர்கள். பிரதமர் சில நாட்களுக்கு முன்பு கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்தார். அந்தப் பெயரை மீண்டும் ஒருமுறை சொல்லிப் பாருங்கள், ‘கங்கை’ கொண்ட சோழபுரம். கங்கையை கொண்டவன் அவன், அதாவது கங்கையை வென்றவன் அவன். தமிழன் கங்கையை வெல்லுவான். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை பயங்கரவாத தாக்குதல் நடக்கும் போதும், இனிமேல் இதுபோல் நடக்காது என சொல்கிறீர்கள். விஸ்வகுரு என சொல்லிக் கொள்கிறீர்களே… விஸ்வகுரு என்ன பாடத்தை கற்றுக் கொண்டார்? நீங்கள் பணிவை கூட கற்றுக் கொள்ளவில்லை.

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உங்களிடம் என்ன பதில் இருக்கிறது? அந்த அப்பாவி சுற்றுலா பயணிகள் உங்களை நம்பி நீங்கள் பாதுகாப்பு தருவீர்கள் என்று நம்பி தானே அங்கே சுற்றுலா சென்றார்கள். மக்களை பாதுகாப்பதில் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது. நமது பிரதமர் இந்த உலகத்திலே இருக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் நேரடியாக சென்று வருகிறார். ஆனால் உலக நாடுகளுடனான ராஜதந்திரத்தில் நாம் சாதித்தது என்ன? பாகிஸ்தான் நம்முடைய மண்ணில் செய்யும் பயங்கரவாத செயலை எந்த ஒரு நாடாவது வெளிப்படையாக கண்டித்ததா? இதுதானா உங்களுடைய வெளியுறவு கொள்கை?

நீங்கள் எந்த நாட்டையும் நண்பர்களாக வைத்துக் கொள்ளவில்லையா? ஏன் இந்த நிலைமை? இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பயங்கரவாத தாக்குதல்களை பயங்கரவாத செயல்களை எந்த ஒரு நாடும் வெளிப்படையாக ஏன் கண்டிக்கவில்லை? நமக்கு அருகில் இருக்கக்கூடிய இலங்கையோடு நீங்கள் மிகவும் அருமையான உறவை பேணி வருகிறீர்கள். உங்களுக்கு வேண்டப்பட்டவருக்காக அங்கே ஒப்பந்தமெல்லாம் செய்திருக்கிறீர்கள். ஆனால் இன்றும் தமிழ்நாட்டின் மீனவர்கள் ஒவ்வொரு நாளும் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள் கைது செய்யப்படுகிறார்கள். மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

நமது போர் பாகிஸ்தானுடன் ஆனது என்பது மட்டுமல்ல… அதையும் தாண்டியது. ஒரு மிகப்பெரிய நாடு அவர்களை வைத்து நம் மீது நிழல் யுத்தம் நடத்துகிறது. அதை எதிர்கொள்ள நாம் உண்மையிலேயே தயாராக இருக்கிறோமா? நமது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், நமது பகைவர்களை புரிந்து கொள்ள வேண்டும், எதற்கும் தயாராக இருக்க வேண்டும். விஸ்வ குரு தன் மக்களை பாதுகாப்பதில் தோல்வி அடைந்து விட்டார். விஸ்வ குரு எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. விஸ்வகுரு எந்தப் பாடத்தையும் நடத்தவில்லை. உறுதியான தலைவர் என்றால், மற்றவர்களுடன் சண்டையிட்டு வெல்பவர் அல்ல. எவர் ஒருவர் வந்ததும் போரற்ற அமைதி தொடங்குகிறதோ அவர்தான் தலைவர். அப்படிப்பட்ட ஒரு தலைவராக, அரசனாகத்தான் கங்கை கொண்ட சோழன் இருந்தான். தமிழ்நாடு வந்தீர்கள், பாடம் கற்றுக் கொண்டு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு கனிமொழி பேசினார்.

The post கங்கை கொண்ட சோழனிடம் விஸ்வகுரு பாடம் படிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Gangaikonda ,Chola ,Kanimozhi ,Lok Sabha ,New Delhi ,DMK ,Deputy General Secretary ,Operation Sindhur ,Home Minister ,Amit Shah ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...