×

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம்; பெரும் குளறுபடி இருந்தால் கடும் நடவடிக்கை: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம்கோர்ட் எச்சரிக்கை

புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தலைமை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டது. இதன் விளைவாக, சுமார் 65.2 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆதார் மற்றும் குடும்ப அட்டை போன்றவற்றை வசிப்பிடச் சான்றாகப் பரிசீலிக்க வேண்டுமே தவிர, அவற்றை முழுமையாக நிராகரிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்குத் தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1ம் தேதி பட்டியலை வெளியிட அனுமதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் ஒருவர், ‘வாக்காளர் திருத்தப்பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிடப்பட உள்ளதால், இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவு ஒன்றை பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், ‘இவ்வழக்கில் ஏற்கனவே எதிர் உறுதிமொழி ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் புதிய பதில் மனுக்களைத் தாக்கல் செய்யத் தேவையில்லை. இவ்வழக்கு ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதற்கு முன்பாக, ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விரிவான உறுதிமொழி ஆவணத்தைத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், வாக்காளர் பெயர் நீக்கத்தில் பெரும் எண்ணிக்கையில் குளறுபடிகள் இருப்பது கண்டறியப்பட்டால், உச்ச நீதிமன்றம் கடுமையாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்றும் தேர்தல் ஆணையத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

The post பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம்; பெரும் குளறுபடி இருந்தால் கடும் நடவடிக்கை: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம்கோர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bihar ,Supreme Court ,Election Commission ,New Delhi ,Chief Election Commission ,Dinakaran ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...