×

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கணக்கெடுப்பு: சைபீரியா, மங்கோலியா பறவைகள் பதிவானது

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் சைபீரியா கருவாய் மூக்கன், மங்கோலியா வரித்தலை வாத்து பறவைகள் பதிவானது. தமிழக வனத்துறை உதவியுடன் அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மையம், மணிமுத்தாறு, முத்துநகர் மற்றும் தூத்துக்குடி, நெல்லை இயற்கை அறக்கட்டளையினர் 12வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பினை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் 20,21,22 ஆகிய 3 நாட்கள் நடத்தினர்.இதில் மாணவர்கள், பெண்கள், விவசாயிகள், பொறியாளர்கள், தொழில் முனைவோர்கள், நெல்லை நீர்வளம் தன்னார்வலர்கள் என 90 பேர் 9 குழுக்களாக பிரிந்து 65 குளங்களில் கணக்கெடுப்பை மேற்கொண்டனர். அவற்றில் 69 சிற்றினத்தை சேர்ந்த 28,831 பறவைகளும், அதிகபட்சமாக 4,907 உன்னிக்கொக்கும், 1,752 வெள்ளை அரிவாள் மூக்கனும், 1,574 சிறிய நீர்க்காகமும், 1,567 கருப்புக் கோட்டானும், 1,480 சில்லித்தாரா பறவைகளும், அதிகபட்சமாக 1,066 மீசைஆலா, 845 நீலச்சிறகு வாத்து, 768 தைலான் குருவிகளும் பதிவானது.தூத்துக்குடி வெள்ளுரில் 2,126, குப்பைக்குறிச்சி 1,777, கங்கைகொண்டானில் 1,385, சுரண்டையில் 1,373, ஆறுமுகமங்கலத்தில் 1,325, சிவகளையில் 1,116, கங்கைகொண்டான் வடகரையில் 1,021, தென்காசி வாகைக்குளத்தில் 1,010 பறவைகள் பதிவாகியுள்ளது. கங்கைகொண்டான், நயினார்குளம், சூரங்குடி குளம், ஏரல் திருப்பணிச்செட்டிக்குளம், கோவில்பட்டி மூப்பன்பட்டிகுளம், தென்காசி வாகைக்குளம், ராஜகோபாலப்பேரி குளங்களிலுள்ள மரங்களிலும் பறவைகளின் இனப்பெருக்கம் பதிவானது. வெள்ளை அரிவாள் மூக்கன், பாம்புத்தாரா, நீர்க்காகம், வக்கா, கருப்பு அரிவாள் மூக்கன், நத்தைக்குத்தி நாரை, சாம்பால் நாரைகளின் இனப்பெருக்கம் அறியப்பட்டுள்ளது. மஞ்சள்மூக்கு வாத்து, நாமக்கோழி, கானாங்கோழி, முக்குளிப்பான், தாழைக்கோழி பறவைகள் குஞ்சுகளுடன் பெரும்பாலான குளங்களில் பதிவானது. அருகிவரும் பறவை இனமான அரிவாள்மூக்கன் நெல்லை நயினார்குளத்தில் 300ம்,   சுரண்டை குளத்தில் 46ம் பதிவானது. இவைகள் சைபீரியாவிலிருந்து இந்தியாவிற்கு வருவது குறிப்பிடத்தக்கது. மங்கோலியாவிலிருந்து வரும் வரித்தலை வாத்து பறவை இனம் விஜயநாராயணம், புதுக்குளம், வடக்கு கழுவூர் குளத்திலும் உள்ளது. அழிவிலுள்ள பறவை இனமான வெண்கழுத்து நாரை கோவில்பட்டி முடுக்குமீண்டான்பட்டிகுளத்திலும், களியன் வாத்து நெல்லை குப்பைக்குறிச்சி குளத்திலும் பதிவானது. இவைகள் ஐரோப்பா மற்றும் ஆர்டிக்கில் இனப்பெருக்கம் செய்யும். தாமிரபரணி குளங்களில் அரிதாக காணப்படும் பெரிய சீழ்க்கை சிறகி தூத்துக்குடி ஆறுமுகமங்கலம் குளத்தில் பதிவானது.நெல்லை வேய்ந்தான்குளத்தில் 20 வகையான பறவைகள் பதிவானது. டவுன் நயினார்குளம் குளக்கரையிலுள்ள மரங்களில் பாம்புத்தாரா பறவை நூற்றுக்கணக்கில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்துள்ளது. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அருகிலுள்ள வடக்கு கழுவூர்குளத்தில் ஏராளமான கூளக்கிடாக்கள் இனப்பெருக்கம் செய்யும், இந்தாண்டு ஒன்றுகூட இல்லை. இத்தகவலை தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தெரிவித்தார். …

The post நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கணக்கெடுப்பு: சைபீரியா, மங்கோலியா பறவைகள் பதிவானது appeared first on Dinakaran.

Tags : Nellai, ,Tuticorin ,Tenkasi ,Nellai ,Nellai, Tuticorin ,Tenkasi Districts ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...