×

22 செவிலியர்களுக்கு 2025ம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர்,வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில், 22 செவிலியர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (28.7.2025) வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில், 22 செவிலியர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழா இலட்சினை (Logo) மற்றும் நூற்றாண்டு விழா நிகழ்வுகளின் காலண்டர் தொகுப்பினை வெளியிட்டார். இந்நிகழ்வில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை; தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின்
(Tamil Nadu Nursing and Midwives Council) நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களோடு உரையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமை அடைகின்றேன்.

முதலில் உங்களுடைய கவுன்சிலின் தலைவர் மருத்துவர் ராஜமூர்த்தி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், அன்பையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த கவுன்சிலைப் பொறுத்தவரைக்கும் உங்களுக்கு அவர் தலைவர். பல பேருக்கு தெரியும், சில பேருக்கு தெரியாது எனக்கு அவர் சொந்த தாய்மாமா, என்னை தூக்கி வளர்த்தவர் அவர். இன்னும் சொல்லப் போனால் கோபாலபுரம் வீட்டில் கலைஞர் இல்லத்தில் நானும் அவரும் ரூம் மெட்ஸ். ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்றாகத்தான் படித்தோம். அவர் நன்றாகப் படித்து டாக்டர் ஆகிவிட்டார். நான் சரியாகப் படிக்காமால் துணை முதலமைச்சர் ஆகிவிட்டேன். இந்த நிலைமையில் நான் இங்கே நிற்பதற்கும் மிக, மிக முக்கியமான காரணம் ராஜமூர்த்தி . இந்த நிகழ்ச்சிக்கு நான் கலந்து கொள்ள இந்த வாய்ப்பை அளித்ததற்கு நான் மீண்டும் ராஜமூர்த்தி மாமா அவர்களுக்கும், உங்களுடைய துறை அமைச்சர் அண்ணன் மா.சு அவர்களுக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கே வருகை தந்திருக்கக்கூடிய ஒவ்வொரு செவிலியருடைய முகத்தை பார்க்கின்ற போது மிகப்பெரிய அளவில் தன்னம்பிக்கை உணர்வும், பாதுகாப்பு உணர்வும் எனக்கு ஏற்படுகின்றது.

ஏனென்றால், உலகில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய சொந்தத்தாயின் முகத்தை பார்ப்பதற்கு முன்பாக இங்கு வந்திருக்கக்கூடிய செவிலியர்கள் உங்களுடைய முகத்தை தான் பார்க்கின்றார்கள். அப்படிப்பட்ட உங்களை சந்திப்பதில் நான் மிகுந்த பெருமை அடைகின்றேன். பூரிப்பு அடைகின்றேன். உங்களுக்கெல்லாம் தெரியும், கடந்த ஒரு வார காலமாக நம்முடைய முதலமைச்சர் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். அந்த ஒரு வாராமாக நான் எந்த இடத்திற்கு சென்றாலும், மக்கள் என்னைப் பார்த்து கேட்பது, அண்ணன் முதலமைச்சர் எப்படி இருக்கிறார், தலைவர் எப்படி இருக்கிறார், எங்கள் அண்ணன் எப்படி இருக்கிறார் என்று என்னிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களிடம் தலைவர் நலமோடு இருக்கிறார் இரண்டு, மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று நம்பிக்கையோடு சொன்னோம். நம்முடைய முதலமைச்சர் நலமாக நேற்று வீடு திரும்பியிருக்கின்றார். அதற்காக அவருக்கு உற்றத்துணையாக இருந்த மருத்துவர்கள், மிக, மிக முக்கியமாக உங்களைப் போன்ற செவிலியர்களுக்கு இந்த நேரத்தில், இந்த மேடையில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையம் (Tamil Nadu Nurses and Midwives Council) இன்றைக்கு 100 ஆண்டுகளை கடந்து இருக்கின்றது.

அரசியல் சார்பற்ற, ஒரு கவுன்சிலை ஓராண்டு நடத்துவதே சிரமம். ஆனால், நீங்கள் நூறு ஆண்டுகளை கடந்து இருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த கவுன்சிலுக்கும், நம்முடைய திராவிட இயக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏனென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடி இயக்கமான நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் தான், அதாவது 1926 ஆம் ஆண்டில், மெட்ராஸ் செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் மசோதா (Madras Nurses and Midwives Bill) கொண்டுவரப்பட்டு அது சட்டமாக்கப்பட்டது. நீதிக்கட்சி நிறைவேற்றிய அந்தச் சட்டம் தான் இந்தியாவிலேயே முதல்முறையாக செவிலியர் பணிக்கு சட்டப்பூர்வமான ஒழுங்குமுறையை வழங்கியது. இந்த கவுன்சில் தான், இந்தியாவில் மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவிலேயே செவிலியர்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் கவுன்சில் என்ற பெருமைக்குரியது. அதேபோல், உலகிலேயே மூன்றாவதாக நூற்றாண்டு காணுகின்ற செவிலியர் கவுன்சில் என்ற பெருமை நம்முடைய தமிழ்நாட்டின் செவிலியர் கவுன்சிலுக்கு உண்டு. எனவே, இந்த கவுன்சில் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல. இது நம்முடைய இந்தியாவிற்கே மிகப்பெரிய பெருமையாகத் திகழ்கின்றது. நோய்கள் பரவாமல் இருக்க, தடுப்பூசி மிக, மிக அவசியம்.

ஆனால், தடுப்பூசி போடச் சென்றால், டாக்டர்களையும் செவிலியர்களையும் துரத்திய காலம் ஒன்று இருந்தது. அப்படிப்பட்ட மக்களிடம் பக்குவமாகப் பேசி, அவர்களுக்கு புரிய வைத்து, தடுப்பூசிப் போட்டு பல நோய்களை பரவாமல் தடுத்தப் பெருமை இங்கே கூடியிருக்கிற செவிலியர் சமூகத்துக்கு தான் உண்டு. திராவிட இயக்கமும் அப்படி தான். சமூகத்தைப் பிடித்த நோய்களை தீர்ப்பதற்காக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் போன்றவர்கள் பகுத்தறிவுக் கருத்துகளை ஊர், ஊராகப் போய் சொன்னார்கள். ஆனால் ஆரம்பத்தில் மக்கள், அவர்களை எதிர்த்தார்கள், தடுத்தார்கள், தாக்கினார்கள். ஆனால், அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு அந்தத் தலைவர்கள் தொண்டாற்றிய காரணத்தால் தான், இன்றைக்கு நம்முடைய தமிழ்ச் சமூகம் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். பல நோய்கள் பரவி தமிழ்நாட்டை உலுக்கிய நிலையில் அதையெல்லாம் முன்களப் பணியாளர்களாக நின்று தடுத்தது செவிலியர் சமூகத்தை சேர்ந்த நீங்கள் தான். குறிப்பாக கொரோனா காலத்தில் நீங்கள் ஆற்றிய பணியை எந்த காலத்திலும் யாராலும், மறுக்க முடியாது, மறக்க முடியாது.

பல செவிலியர்கள், வீட்டை விட்டு, குழந்தைகளை விட்டு, பெற்றோர்களை கூட சந்திக்காமல், இரவு, பகல் பார்க்காமல் நீங்கள் பணி செய்தீர்கள். இன்னும் சொல்லப் போனால், ஒரு சில செவிலியர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் இன்னுயிரைக் கூட தந்தீர்கள். இந்த கவுன்சில் உருவாக காரணமான இந்தச் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றும் போது, அங்கே உறுப்பினராக இருந்த டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் சொன்ன வார்த்தை இது, “Trained nurses are the cornerstone of modern public health” என்று செவிலியர் பணியைப் பற்றி அழகாக சொல்லியிருக்கிறார். அதாவது, “பயிற்சி பெற்ற செவிலியர்கள் தான் நவீன பொதுச் சுகாதாரத்தின் ஆதாரம்” என்று சொன்னார். அந்த முத்துலட்சுமி அம்மையாரின் பெயரில் தான், கருவுற்ற தாய்மார்களுக்கு சத்துணவும் நிதியுதவியும் வழங்கக் கூடிய திட்டத்தை நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் 1989 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்கள். 200 ரூபாய் நிதியுதவியோடு தொடங்கப்பட்ட அந்தத் திட்டம் தான், இன்றைக்கு 18 ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக வளர்ந்து, தமிழ்நாட்டில் நடக்கின்ற பிரசவங்களை எல்லாம் ‘Institutional Delivery’ஆக மாற்றியுள்ளது. பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பு விகிதத்தை பெருமளவு குறைத்து, இன்றைக்கு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது.

அதற்கு இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த வெற்றிக்கு காரணம் உங்களுடைய பங்களிப்பு தான். எல்லா மனித உயிர்களையும் சமமாகக் கருதக் கூடிய பணியென்றால் அது டாக்டர்களும் செவிலியர்களும் தான். இன்றைக்கு தமிழ்நாட்டில் இந்த கவுன்சிலில் மொத்தம் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பதிவு செய்திருப்பதாக இங்கே கூறினார்கள். இவ்வளவு செவிலியர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் வளர்ந்திருப்பதற்கு திமுக ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களும், உருவாக்கப்பட்ட சுகாதாரக் கட்டமைப்புகளும் தான் மிக முக்கிய காரணம் என்பதை நீங்கள் உணர வேண்டும். தமிழ்நாட்டில் இன்றைக்கு கிராமப்புற சுகாதார கட்டமைப்புகள் சிறப்பாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தான் ஆகும். அவருடைய ஆட்சிக்காலத்தில் தான், கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் எல்லாம் உருவாக்கப்பட்டன.

அதேபோல், மாவட்ட மருத்துவமனைகளில் இரத்த வங்கி (blood bank) கொண்டுவரப்பட்டதும் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் தான். இன்னும் சொல்லப் போனால், நவீன சிகிச்சை கருவிகள், ஸ்கேன் மெசின்கள் என்று மருத்துவமனைகளை நவீனமையமாக்கியது கலைஞர் அவர்களுடைய ஆட்சி காலத்தில் தான். கலைஞர் சுகாதாரத்தின் மீது, மருத்துவக் கட்டமைப்பின் மீது எந்த அளவுக்கு அக்கறையோடு இருந்தார் என்பதற்கு இங்கே ஒரே ஒரு உதாரணத்தை நான் கூற விரும்புகின்றேன். கலைஞர் வாழ்ந்த வீடு, சொந்த வீடு, கோபாலபுரம் வீடு என்பது உங்களுக்கு தெரியும். இந்தியாவின் அரசியலை பல ஆண்டுகள் தீர்மானித்த இடம் அந்த கோபாலபுரம் இல்லம் தான். நாங்கள் எல்லாம் பிறந்து, வளர்ந்து குழந்தைகளாக இருந்து ஓடி ஆடி விளையாடிய இல்லம், கோபாலபுரம் இல்லம். அந்த வீட்டை, தன்னுடைய காலத்திற்கு பிறகு ஒரு மருத்துவமனையாக ஆக்க வேண்டும் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார் டாக்டர் கலைஞர் . இதன் மூலம் மனிதநேயத்தின் உச்சத்திற்கே சென்ற தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர்.

இன்றைக்கு கலைஞர் வழியிலே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற நம்முடைய முதலமைச்சர் , தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி மக்களை தேடி மருத்துவம் என்கின்ற மிகப் பெரிய திட்டத்தை உங்களுடைய ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய திராவிடல் மாடல் அரசு என்றைக்கும் செவிலியர்களுக்கு பக்க பலமாக நிற்கும். இன்றைக்கு நூற்றாண்டு காண்கின்ற இந்த செவிலியர் கவுன்சில் மேலும் பல ஆண்டுகள் செயல்பட்டு, மக்கள் பணியாற்றிட வேண்டும், தமிழ்நாட்டின் சுகாதாரத்தை பேணிப் பாதுகாத்திட வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொண்டு, விருது பெற்ற அனைவருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, இந்த நிகழ்ச்சியில் பங்குபெற எனக்கு வாய்ப்பு அளித்த உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, மரு. நா. எழிலன், நிலைக் குழுத் தலைவர் (பணிகள்) திரு.நே. சிற்றரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநர் மரு. அருண் தம்புராஜ், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் மற்றும் தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் தலைவர் டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ) மரு. தேரணிராஜன், தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் பதிவாளர் முனைவர் எஸ்.அனி கிரேஸ் கலைமதி, தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் துணைத்தலைவர் முனைவர். அனி ராஜா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

 

The post 22 செவிலியர்களுக்கு 2025ம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர்,வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Best Nurse and Lifetime Achievement Awards ,Tamil Nadu ,Achievement ,Tamil Nadu Nursing and Maternity Nurses Association ,Udhayanidhi Stalin… ,
× RELATED அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு...