×

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூலை 29: உயர் நீதிமன்ற நீதிபதி சாமிநாதனால் அறிவிக்கப்பட்ட வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீதான அவதூறு வழக்கு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் தஞ்சாவூரில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனித உரிமை போராளியும், மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞருமான வாஞ்சிநாதன் மீது உயர்நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதை திரும்ப பெற வேண்டும். சனாதன, காவியம் நடவடிக்கைகளை கண்டித்து போராடும் மக்கள் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக துணை நிற்போம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் நேற்று தலைமை அஞ்சலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தேவா தலைமை வகித்தார். மக்கள் அதிகாரத்தின் மூத்த தலைவர் காளியப்பன் ஆர்ப்பாட்டத்தினை துவங்கி வைத்து பேசியதாவது: தமிழ்நாட்டின் முன்னணி மனித உரிமை செயல்பாட்டாளரான வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீது எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல், எந்த சட்ட நடைமுறையையும் பின்பற்றாமல் மதுரை உயர்நீதிமன்ற அமர்வின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்னால் வாஞ்சிநாதன் நீதிபதி சாமிநாதன் அவர்களுடைய இத்தகைய அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு எதிரான தீர்ப்புகளையும், கருத்துக்களையும் குறிப்பிட்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பி இருந்தார். அந்த ரகசியமான புகாரை அதிமுக வழக்கறிஞர் ராஜராஜன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த சட்டவிரோத நடவடிக்கையை தடுப்பதற்கு மாறாக அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக சட்டப்படியான உரிமையின் அடிப்படையில் புகார் தெரிவித்த வாஞ்சிநாதன் அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளார். வாஞ்சிநாதன் மீது நீதிபதி தொடுத்திருக்கும் அவமதிப்பு வழக்கை எந்த நிபந்தனையும் இன்றி உடனே திரும்ப பெற வேண்டும். நீதித்துறையில் அதிகரித்து வரும் சனாதன போக்குகள் சனாதன கருத்துக்கள் தீர்ப்புகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் அணி திரண்டு போராடி நீதித்துறையின் குறைந்தபட்ச மாண்பை பாதுகாக்க வேண்டும் என்று பேசினார். பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக செயல்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.

Tags : People's Power ,Thanjavur ,Advocate ,Vanchinathan ,High Court ,Judge ,Saminathan ,Madurai High Court Branch ,Advocate Vanchinathan ,People's ,Lawyer ,Sanathana ,Kaviyam ,
× RELATED ஓய்வூதியர் தின விழா