×

கோபி அருகே முதியவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் நிலம் தொடர்பான முன்விரோதம் உள்ளது

கோபி, ஜூலை 29: கோபி அருகே உள்ள எலத்தூர் நாகமலையில் முதியவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் நிலம் தொடர்பான முன்விரோதம் இருப்பதாக மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது. கோபி அருகே உள்ள எலத்தூர் நாகமலையை சேர்ந்தவர் லிங்குசாமி (66). இவரது மனைவி ஈஸ்வரியின் தங்கை விஜயலட்சுமி (52). இவர்கள் நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்தனர். இதில், விஜயலட்சுமி வீட்டின் முன் பகுதியில் இருந்தபோது அங்கு வந்த கும்பல் கட்டையால் தாக்கி உள்ளது. விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த லிங்குசாமி மீதும் அந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், இருவரும் படுகாயமடைந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் எஸ்.பி சுஜாதா சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், மாவட்ட எஸ்.பி சுஜாதா காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: லிங்குசாமி மற்றும் விஜயலட்சுமி மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது தொடர்பாக கடத்தூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில் லிங்குசாமி மற்றும் விஜயலட்சுமி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இடம் தொடர்பான பிரச்னை உள்ளது. அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடந்து உள்ளது. இது தவிர வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Gopi ,Nagamalai, Elathur ,Lingusamy ,Eeswari ,Vijayalakshmi ,
× RELATED பைக் திருடிய வாலிபர் கைது