×

நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

துரைப்பாக்கம்: சென்னை நீலாங்கரை, கேசுவரினா டிரைவ் தெரு பகுதியில் பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய்யின் வீடு உள்ளது. இந்நிலையில், இன்று காலை சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் பேசிய மர்ம நபர், நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் தெரிவித்து தொடர்பை துண்டித்துவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் மோப்ப நாய் உத்தமன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு நீலாங்கரை போலீசார் விரைந்து சென்றனர். அங்கு நடிகர் விஜய் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு இருக்கிறதா என போலீசார் அதிரடி சோதனை நடத்தினார். வீட்டின் பல பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனையிட்டனர்.

இச்சோதனையில், நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என போலீசாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் நம்பரை வைத்து, நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை நீலாங்கரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு நிலவியது.

The post நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Nilangara ,Nilangara, Chennai ,Tamil Nayak Victory Club ,Keswarina Drive Street ,Chennai Police Control Room ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...