×

ஊட்டி அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

*சிபிஆர் செயல்முறை விளக்கம்

ஊட்டி : ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பள்ளி ஆசிரியர்களுக்கு உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு சார்பில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தின் வழிகாட்டுதல் படி மாதந்தோறும் 4-வது வியாழக்கிழமை ஒவ்வொரு துறை சார்ந்த பணியாளர்கள், ஊழியர்களுக்கு முதல்கட்ட உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை பிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளை சேர்ந்த 30 ஆசிரியர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி தலைமை வகித்து பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார். பயிற்சியில் சுய நினைவின்றி இருப்பவர்களுக்கு சிபிஆர் எனப்படும் செயற்கை மூச்சு மற்றும் நெஞ்சு பகுதியில் அழுத்தம் கொடுத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பாக செயல்முைற விளக்கம் அளிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை எவ்வாறு மிகுந்த பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது? தலையில் காயமடைந்தவர்கள், முதுகு தண்டுவடத்தில் காயமடைந்தவர்கள், ரத்த போக்கு மேலாண்மை, விபத்து அல்லது வேறு காரணங்களால் காயமடைந்தவர்கள் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுவதை கட்டுப்படுத்துவது, விபத்தில் துண்டிக்கப்பட்ட பகுதி பராமரிப்பு, மாரடைப்பு, பக்கவாதம், வலிப்பு, பாம்பு கடி மற்றும் விஷ பூச்சிகள் கடி முதுலுதவி, 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

தீயணைப்புத்துறை சார்பில் நோயாளிகள் அணி திரட்டல் மற்றும் பேரிடர் மீட்பு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிபிஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சையை செய்து காண்பித்தனர். பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தங்கள் பயிலும் மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி கூறுகையில், ‘வரும் மாதங்களில் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறை, மாணவர்கள், பொதுமக்களுக்கு முதலுதவி பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது, என்றார்.

The post ஊட்டி அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Ooty Government Hospital ,Ooty ,Ooty Government Medical College Hospital ,Emergency Department ,Nilgiris District… ,Dinakaran ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...