×

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் ஜூலை 28-ல், மாநிலங்களவையில் ஜூலை 29-ல் விவாதம்

டெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஜூலை 28-ல் மற்றும் மாநிலங்களவையில் வரும் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஜூலை28, 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடைபெறும். மக்களவையில் 16 மணிநேரமும், மாநிலங்களவையில் 9 மணிநேரமும் விவாதத்துக்காக ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அலுவல் ஆலோசனைக் குழு (பிஏசி) கூட்டத்திற்குப் பிறகு இதுகுறித்த முடிவு இறுதி செய்யப்பட்டது.

இந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இதன்காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது.

ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கூட்டத் தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றன. அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு இவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் வலியுறுத்தினர். இந்த விவாதத்தின் போது, பிரதமர் மோடி கட்டாயம் அவையில் இருக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அலுவல் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளனர். இதற்கு அரசு தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டாலும், எந்த உறுதிமொழியும் தரப்படவில்லை.

அதே போல, விவாதத்தின் நிறைவாக பிரதமர் மோடி பதிலளித்து பேசுவாரா என்பது குறித்தும் இறுதி செய்யப்படவில்லை. அதே சமயம், இந்தியா-பாகிஸ்தான் போரை அமெரிக்கா தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக கூறுவது குறித்தும், ஏன் திடீரென போர் நிறுத்தப்பட்டது, எந்த சூழலில் அந்த முடிவு எடுக்கப்பட்டது, இந்த போரால் இந்தியா சாதித்தது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடக்க உள்ள விவாதம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் ஜூலை 28-ல், மாநிலங்களவையில் ஜூலை 29-ல் விவாதம் appeared first on Dinakaran.

Tags : Operation Chintour ,Lalakawa ,Delhi ,House of Commons ,Parliamentary Rainy Session ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது