×

ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து

புதுடெல்லி: ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான 787-8 டீரிம்லைனர் விமானம் லண்டனின் கேட்விக் நகருக்கு புறப்பட்டது. விமானம் மேலே பறக்க தொடங்கிய 30 நொடிகளிலேயே விமான நிலையம் அருகிலிருந்த மருத்துவ கல்லூரி கட்டிடம் மீது விழுந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உள்பட மொத்தம் 275 பேர் பலியாகினர்.

பின்னர் பலி எண்ணிக்கை 260ஆக குறைக்கப்பட்டது. விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்து விமானங்களையும் ஆய்வு செய்யவும், பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்குமாறும் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ஏர் இந்தியா நிறுவன விமானம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏஐ 315 ஏர்பஸ் நியோ 321 ரக பயணிகள் விமானம் 100 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் ஹாங்காங்கில் இருந்து நேற்று மாலை டெல்லி விமான நிலையத்துக்கு வந்தது. பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று விமானத்தின் வால்புறத்தில் உள்ள துணை மின் அலகு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு புகை வெளியேறியது. உடனே கணினி இயக்கம் மூலம் துணை மின் அலகு மூடப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு குழுவினர் தீயை அணைத்தனர்.

இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வௌியிட்ட அறிக்கையில், “தீ விபத்தால் விமானத்தின் சில பாகங்கள் சேதமடைந்தன. ஆனால் பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். விபத்து குறித்து ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவானில் இந்த விபத்து நேரிட்டிருந்தால் பெருமளவில் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். ஏர் இந்தியா நிறுவன விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

 

The post ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Air India ,Hong Kong ,Delhi ,NEW DELHI ,AIR ,Dinakaran ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...