புதுடெல்லி: ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை தொடர்ந்து அடுத்த துணை ஜனாதிபதி யார் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஜெகதீப் தன்கர் திடீரென துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற கேள்வி பரபரப்பாகி உள்ளது. புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வரை மாநிலங்களவையின் பொறுப்பு தலைவராக துணை தலைவர் ஹரிவன்ஸ் நாராயண் சிங் செயல்படுவார். பொதுவாக, துணை ஜனாதிபதி பதவி காலியானதும் அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
அதாவது வரும் செப்டம்பர் 19ம் தேதிக்குள் நடத்த வேண்டும். எலக்ட்ரோல் காலேஜ் முறையில் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். இதில் மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் வாக்களிப்பார்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். மாநிலங்களவை எம்பியாகும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். வேறு எந்த அரசுப் பதவியிலும் இருக்கக் கூடாது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகளில் சரிபாதிக்கும் அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். தற்போது மக்களவையில் ஒரு இடமும், மாநிலங்களவையில் 5 இடங்களும் காலியாக இருப்பதால் இரு அவைகளையும் சேர்த்து மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 786 ஆக உள்ளது. இதில், ஒரு வேட்பாளர் வெற்றி பெற 394 ஓட்டுகள் தேவை. மக்களவையில் 542 எம்பிக்களில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்பிக்கள் உள்ளனர்.
மாநிலங்களவையில் இக்கூட்டணி 129 எம்பிக்களை கொண்டுள்ளது. எனவே, இரு அவைகளிலும் பாஜ கூட்டணிக்கு மொத்தம் 422 எம்பிக்கள் இருப்பதால் அவர்கள் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. எனவே, பாஜ யாரை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப் போகிறது என்பது தொடர்பாக பலரது பெயர்கள் அடிபட்டு வருகின்றன.
இதில், மாநிலங்களவை துணைத் தலைவராக இருக்கும் ஹரிவன்ஸ் சிங், துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பாஜ தலைமைக்கு மிகவும் விசுவாசமானவர் ஹரிவன்ஸ். இவரைத் தவிர, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சமீபகாலமாக பாஜவுக்கு ஆதரவாக பேசப்படுவதால் காங்கிரசில் இருந்து ஓரங்கட்டப்படும் சசிதரூர் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. மேலும், சில மாநில ஆளுநர்களும் பாஜவின் துணை ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
The post நிதிஷ் முதல் சசிதரூர் வரை அடிபடும் பெயர்கள் அடுத்த துணை ஜனாதிபதி யார்? தேர்தலில் வெற்றி பெற பாஜவுக்கு போதிய பலம் appeared first on Dinakaran.
