×

புதுக்கோட்டை, கவிநாட்டுக் கண்மாய் வரத்து கால்வாயில் கி.பி 6ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை, கவிநாட்டுக் கண்மாய் வரத்துக் கால்வாய் தூர்வாரும் பணிகளின் போது, கி.பி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கல்வெட்டுப் பலகைத் தூண் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கவிநாட்டுக்கண்மாய் மற்றும் அதன் வரத்துவாரிகளைக் இரு மாதங்களாக தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தூர்வாரும் பணிகளின் போது சேந்தமங்கலம் அணையிலிருந்து கவிநாட்டுக் கண்மாய்க்கு நீர் வரும் வரத்துக்கால்வாயில் மேலபழுவஞ்சிக் கிராமத்திற்குத் தெற்கே எழுத்துப் பொறிப்புடன் கூடிய கற்பலகை ஒன்று இருப்பதாக இப்பணிகளை ஒருங்கிணைத்து வரும் நிமல்ராகவன் தகவல் அளித்தார்.

தகவலறிந்த சென்ற சுதர்சன் கல்லூரி துணை முதல்வர். முத்தழகன் மற்றும் வரலாற்று ஆர்வலர் க.நாராயணமூர்த்தி குழுவினர் ஆய்வு செய்ததில், கல்வெட்டானது கி.பி 6ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியர் முத்தழகன் கூறுகையில்,இந்தக் கல்வெட்டானது 4 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட கற்பலகையில், ஒன்றரை அடிக்கு, ஒரு அடி செவ்வகமாக செதுக்கப்பட்டு, ‘ஸ்ரீ அலரிகூந்’ என்று பொறிக்கபட்டுள்ளது, இதனை ஸ்ரீ அலரிகூன் எனப் பொருள் கொள்ளலாம். கல்வெட்டின் உள்ள எழுத்துக்களின் வடிவமைப்பை கொண்டு இந்த கல்வெட்டானது கி.பி 6ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

கவிநாட்டு கண்மாயில் உள்ள கி.பி 8ஆம் நூற்றாண்டை மாறன்சடையன் கால மடைக் கல்வெட்டே இதுவரை பழமையானதாகக் கருதிவந்த நிலையில், இந்தக் கல்வெட்டானது கண்மாயின் வரலாற்றை, மேலும் இரு நூற்றாண்டுகள் பழமைமிக்கதாக மாற்றியுள்ளது.

கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அலரிகூன் என்பவர் இப்பகுதி ஆண்ட குறுநிலதலைவராக இருக்கலாம். அவர் சேந்தமங்கலம் அணை அல்லது இந்த வரத்துக்கால்வாயை வெட்டி தெற்கு வெள்ளாற்றில் இருந்து கவிநாட்டுக் கண்மாய்க்கு நீர்வரத்தை உருவாக்கி தந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

ஏனெனில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆரியூர், அன்னவாசல், ஒடுக்கூர் பெரியகுளங்களில் இது போன்று பெயர் பொறித்த கல்தூண்களை நாம் காணமுடிகிறது. கிட்டத்தட்ட 1118 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்நிலையான கவிநாட்டு கண்மாயானது சுமார் 1400 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருவது இக்கல்வெட்டு மூலம் உறுதிசெய்யபட்டுள்ளது என்றார்.

The post புதுக்கோட்டை, கவிநாட்டுக் கண்மாய் வரத்து கால்வாயில் கி.பி 6ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukkottai, Kavinatuk Kanmai Varathu Canal ,Pudukkottai ,Kavinaatuk Kavinadu ,Pudukkottai, BC ,Kavinatuk Kanmai Varathu Canal ,Varathu ,
× RELATED காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக...