×

விடுமுறை நாளையொட்டி இயற்கை சூழலை அனுபவிக்க ஆழியார், கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*வனத்துறை, போலீசார் கண்காணிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் மற்றும் கவியருவிக்கு இயற்கை சூழலை அனுபவிக்க வெளியூர்களில் இருந்து நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. பலரும் பூங்காவில் வெகுநேரம் பொழுதை கழித்து சென்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை மற்றும் கவியருவிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்,வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

கடந்த மே மாதம் இறுதியிலிருந்து ஆழியார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது பருவமழை தொடர்ந்து கொண்டிருந்ததால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டது.கடந்த ஜூன் மாதம் துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் குறைந்தது.

அவ்வப்போது பெய்த மழையால் ஆழியார் பகுதியை சுற்றிலும் அழகான சூழல் நிலவியது. இதனால், ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. அதிலும், விடுமுறை நாட்களில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாகியது.

இதனைத்தொடர்ந்து இந்த மாதத்திலும் வெயிலின் தாக்கம் குறைந்து அவ்வப்போது பரவலான மழையால், இயற்கை சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகமானது.

இதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால்,காலை முதல் சுற்றுலா பயணிகள் வந்தவாறு இருந்தனர். வெயிலின் தாக்கம் இல்லாததால் ஆழியார் அணைப்பகுதியை சுற்றி பார்த்த சிறியவர்கள் முதல் பெரியவர் வரை என பயணிகள் அனைவரும் அருகே உள்ள பூங்காவிற்கு சென்று பொழுதை கழித்தனர்.

நேற்று ஒரேநாளில் மட்டும், ஆழியாருக்கு சுமார் 3500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதுபோல், ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

அதிலும், வெளியூர் சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் வந்தனர்.அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பலரும், ரம்மியமாக கொட்டிய அருவியில் வெகுநேரம் குளித்து மகிழ்ந்தனர். விடுமுறை நாளையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஆழியார் மற்றும் கவியருவிக்கு செல்லும் வழியில் வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

The post விடுமுறை நாளையொட்டி இயற்கை சூழலை அனுபவிக்க ஆழியார், கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Aliyar ,Kaviyar ,Forest Department ,Pollachi ,Coimbatore district ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் நேற்று குறைந்தபட்ச...