
- 14,121 ஆக்கிரமிப்புகள் கூவம் கரையோரம் அகற்றம்
- 4,728 ஆக்கிரமிப்புகள் அடையாறு கரையோரம் அகற்றம்
சென்னை: நீதிமன்ற உத்தரவின்படி கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையின் முக்கியமான நீர்வழித்தடங்களான கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளால் சுருங்கியுள்ளது. இதனால் 2015ம் ஆண்டு சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைகள் நடந்து வந்தாலும் இது முழுமையாக செல்படுத்தப்படவில்லை. இருப்பினும் இந்த மூன்று நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருகிறது.
சமீபத்திலும் அடையாறு ஆக்கிரமிப்பு பகுதியான அனகாபுத்தூரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கரைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி கூவம், பக்கிங்காம், அடையாறு உள்ளிட்ட கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி வருகிறது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதறகான நடவடிக்கைகளில் நீர்வளத்துறை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவுகளின்படி நடவடிக்கைகள் எடுப்பட்டு வருகிறது. ஆனால் நிதி சிக்கல்களால் அனைத்து பணிகளையும் துல்லியமாக முடிக்க முடியாமல் உள்ளது. இருப்பினும் மக்களின் விருப்பத்துடன் மாற்று வசதிகளுடன் இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கூவம் ஆற்றின் கரையோரங்களில் மொத்தமாக 60 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இருந்து வந்தது அடையாளம் காணப்பட்டது. இதில் 52 குடியிருப்புகளில் இருந்து வந்த 14,121 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 1405 குடும்பங்களை வெளியேற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதேபோல் அடையாறு கரையோரங்களில் 9,539 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டது. இதில் 4,728 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதிகளில் வசிப்பவர்களை நில உரிமை கோருவதால் இடமாற்றம் செய்யப்படுவதில் சிக்கல் நிலவி வருகிறது.
மேலும் நீர்வழிகளை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டு வர நீர்வளத்துறை மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை இணைந்து புதிய அளவீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. டிபெரன்ஷியல் குளோபஸ் பொசிஷனிங் சிஸ்டம் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய்களின் எல்லை வரையறை திட்டத்திற்கு ரூ.3.87 கோடி செலவில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. பக்கிங்காம் கால்வாயின் எல்லை வரையறை செய்யும் பணிக்காக ரூ.11.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரப்பு அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.
