தர்மபுரி, ஜூலை 19: தர்மபுரி அருகே ராஜாபேட்டை -குரும்பட்டி வரை ரூ.9 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்க விரைவில் டெண்டர் விடப்படுகிறது. தர்மபுரியில் இருந்து அரூர் வழியாக திருவண்ணாமலைக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அணிவகுக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையின்பேரில் தற்போது நான்கு வழி சாலையாக அமைக்கும் பணி நடந்தது. அதன்படி தர்மபுரியில் இருந்து ஒடசல்பட்டி கூட்ரோடு, மொரப்பூர், அரூர், தீர்த்தமலை, தாணிப்பாடி வழியாக திருவண்ணாமலை வரை 113 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய நான்கு வழி சாலை அமைக்கப்படுகிறது. தற்போது தர்மபுரி – அரூர் இருவழி பாதையில் இருந்து 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது.
7 மீட்டர் அகலம் கொண்ட மாநில நெடுஞ்சாலை 16.20 மீட்டர் அகலம் கொண்ட நான்கு வழி சாலையாக மாற்றப்படுகிறது. இந்த சாலை அமைப்பதால் வாகன நெரிசல் குறைந்து, விபத்து இல்லாமல் குறித்த நேரத்தில் பயண தூரத்தை கடக்க முடியும் என்பதால் சாலை பணிகள் வேகமாக நடந்தது. கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தர்மபுரி -அரூர் வழியாக திருவண்ணாமலைக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. ரூ.410 கோடி மதிப்பீட்டில் இந்த 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக ரூ.313.50 கோடி மதிப்பீட்டில் தர்மபுரி- அரூர் வழி மொரப்பூர் சாலை வரை இருவழிப்பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணியும், ரூ.96.50 கோடியில் அரூர் வழி தாணிப்பாடி-திருவண்ணாமலை சாலை வரை இருவழி பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணியும் துரிதமாக நடந்தது.
இந்த பணிகள் தற்போது நிறைவு பெற்றது. தர்மபுரி-திருவண்ணாமலை சாலையானது 113 கிலோ மீட்டர் தூரமாகும். இதில் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது. தர்மபுரி- அரூர் சாலையில் மதிகோண்பாளையம் அருகே ராஜாபேட்டை-குரும்பட்டி டீக்கடை பஸ்ஸ்டாப் அரசு பொறியியல் கல்லூரி வரை 1.5 கிலோமீட்டர் தூரம் சில காரணங்களால் சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் இருந்தது. பிற பகுதிகளான சோலைக்கொட்டாய், கே.நடுப்பட்டி, மூக்கனூர், செம்மனூர் வனச்சாலை, மொரப்பூர், அரூர், நரிப்பள்ளி வரை 4 வழிச்சாலை விரிவாக்கப்பணிகள் முழுமையாக நிறைவு பெற்றது. தற்போது விடுப்பட்ட ராஜாபேட்டை – குரும்பட்டி டீக்கடை பஸ்ஸ்டாப் அருகே வரையும் நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.9 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த பணிக்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளது.
டெண்டர் பணிகள் முடிந்தவுடன் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி – அரூர் வழியாக திருவண்ணாமலைக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் முடிந்தது. ரூ.410 கோடி மதிப்பீட்டில் இந்த சாலை பணிகள் நடந்தது. இதில், தர்மபுரி- அரூர் வரை ரூ.313.50 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்தது. 52 இடங்களில் சந்திப்பு சாலை அமைக்கப்பட்டது. 36 இடங்களில் பேருந்துகள் நின்று செல்வதற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 99 சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. 100 சதவீத சாலை அமைக்கும்பணிகள் முடிந்தது. ஆனால் இதே தர்மபுரி – அரூர் சாலைப்பகுதியில் ராஜாபேட்டை – குரும்பட்டி டீக்கடை பஸ்ஸ்டாப் அருகே வரை ஒன்றரை கிலோ மீட்டர் சில காரணங்களால் சாலை அமைக்காமல் இருந்தது.
தற்போது இதற்கு தனி மதிப்பீடு தயாரித்து ரூ.9 கோடி அரசு பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது அரசு ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. விரைவில் டெண்டர்விட்டு, சாலைபணிகள் தொடங்கப்படும். இந்த பணிகள் முடிந்தால் தர்மபுரி மாவட்டத்தில் முழுமையாக இந்த சாலை பணிகள் முடிந்துவிடும். அதாவது, தர்மபுரியில் இருந்து அரூர் வழியாக திருவண்ணாமலை வரை முழுமையாக இந்தசாலை பணிகள் முடிந்துவிடும் என்றனர்.
The post ராஜாபேட்டை-குரும்பட்டி இடையே ரூ.9 கோடியில் நான்கு வழிச்சாலை appeared first on Dinakaran.
