×

விவசாயிகளால்தான் குற்றங்கள் அதிகரிக்கிறதா? சோறு போடுவோரை அவமானப்படுத்தாதீர்கள்!: பீகார் ஏடிஜிபியின் பேச்சுக்கு ஒன்றிய அமைச்சர் கண்டனம்

பாட்னா: விவசாயிகளால்தான் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பீகார் ஏடிஜிபி கூறிய நிலையில், 2சோறு போடுவோரை அவமானப்படுத்தாதீர்கள்’ என்று ஒன்றிய அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், கடந்த 15 நாட்களில் அதிர்ச்சியூட்டும் பல கொலைகள் நடந்துள்ளன. புர்னியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். சிவானில் மூன்று பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். பக்சர் மற்றும் போஜ்பூரில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். பாட்னாவில் தொழிலதிபர் கோபால் கெம்கா மற்றும் வழக்கறிஞர் ஒருவர் உள்ளிட்டோர் பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். மேலும், அவுரங்காபாத் மாவட்டத்தில் பிரியன்சு என்பவர் திருமணமான 45 நாட்களில் அவரது மனைவி குஞ்சா சிங்கால் கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டார். இந்த 15 நாட்களில் 31 கொலைகள் பதிவாகியுள்ளன; இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதை காட்டுவதாக எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இதற்கிடையே பீகார் மாநிலத்தில் குற்றச் செயல்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் குறித்து பீகார் மாநில கூடுதல் டிஜிபி குந்தன் கிருஷ்ணன் கூறுகையில், ‘ஹோலி பண்டிகை முதல் பருவமழை தொடங்கும் வரையிலான காலம், விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத காலம். இதனால் குற்றங்கள் அதிகரிக்கின்றன. பருவமழை தொடங்கியவுடன் அவர்கள் விவசாயப் பணிகளில் மும்மரமாகிவிடுவதால் குற்றங்கள் குறைந்துவிடுகின்றன’ என்று கூறினார்.  உயர் பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரியின் இந்த கருத்து, விவசாயிகளால்தான் குற்றங்கள் நடப்பதாக மறைமுகமாகச் சொல்வது போல் அமைந்ததால் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஒன்றிய அமைச்சரும், பாஜக கூட்டணியின் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான் கூறுகையில், ‘நமக்கு சோறும் போடும் விவசாயிகளை மறைமுகமாகக் கொலையாளிகள் என்று கூறுவது, அவர்களின் கவுரவத்திற்கு இழைக்கப்படும் அவமானம் மட்டுமல்ல, அவர்களது தியாகத்தையும், கடின உழைப்பையும் அவமதிக்கும் செயல். குற்றவாளிகளை ஒடுக்குவதை விட்டுவிட்டு, தேவையற்ற அறிக்கைகளை விடுவதில் பீகார் காவல்துறை கவனம் செலுத்துவது கவலையளிக்கிறது’ என்று கூறியுள்ளார். பீகாரில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாட்னா மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டது, தொழிலதிபர், பாஜக தலைவர், வழக்கறிஞர் ஆகியோர் கொல்லப்பட்டது போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது மட்டுமின்றி, போலீஸ் அதிகாரியின் இந்தப் பேச்சு, நிதிஷ் குமார் அரசுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐசியு வார்டு கொலையில் திருப்பம்;
பாட்னாவில் உள்ள பாரஸ் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த சந்தன் மிஸ்ரா என்ற நபரை, ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று ஐசியு வார்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது. இந்தச் சம்பவம் மருத்துவமனையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. கொலை செய்யப்பட்ட சந்தன் மிஸ்ரா, பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி என்பதும், மருத்துவக் காரணங்களுக்காக பரோலில் வெளியே வந்து சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தவுசிப் என்ற முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ளவர்களைப் பிடிக்கப் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

The post விவசாயிகளால்தான் குற்றங்கள் அதிகரிக்கிறதா? சோறு போடுவோரை அவமானப்படுத்தாதீர்கள்!: பீகார் ஏடிஜிபியின் பேச்சுக்கு ஒன்றிய அமைச்சர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Bihar ,ADGP ,Patna ,BJP ,Chief Minister ,Nitish Kumar ,Bihar ADGP ,Dinakaran ,
× RELATED இந்தியா, ஓமன் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து!!