×

ஆரம்ப சுகாதார நிலையங்களில் அலோபதியுடன் சித்தா, ஆயுர்வேத சிகிச்சைகள்: இந்திய மருத்துவ ஆணையத்துடன் ஒப்பந்தம்

சென்னை: தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அதன் கீழ் தாய், சேய் நல சிகிச்சைகள், தடுப்பூசி சேவைகள் உள்பட அனைத்து விதமான தொடக்க நிலை சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மேலும், மாரடைப்புக்கு உயிர்காக்கும் மருந்துகளும் (லோடிங் டோஸ்), பாம்புக் கடி மற்றும் நாய்க்கடிக்கான தடுப்பூசிகளும் போடப்படுகின்றன. அடுத்தக்கட்டமாக 50 இடங்களில் டயாலிசிஸ் சிகிச்சைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மற்றொருபுறம், டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர், வைரஸ் காய்ச்சல்களுக்கு கபசுரக் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதுதவிர வேறு எந்த வகையான இந்திய மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படவில்லை. மாறாக, அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவ சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அனைத்து இந்திய மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து சுகாதார சேவைகளை வழங்க தமிழ்நாடு சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, இந்திய மருத்துவ ஆணையரகம், தேசிய சித்தா ஆராய்ச்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவத்துக்கும், ஆங்கில மருத்துவத்துக்கும் இடையான பாலமாக இது செயல்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு வழக்கமான மருந்துகளுடன் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சைகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆரம்ப சுகாதார நிலையங்களில் அலோபதியுடன் சித்தா, ஆயுர்வேத சிகிச்சைகள்: இந்திய மருத்துவ ஆணையத்துடன் ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Medical Commission of India ,Chennai ,Tamil Nadu ,Siddha ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...