×

இந்தியாவிலேயே முதல்முறையாக மாமல்லபுரத்தில் நடக்கிறது ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை 4வது ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டி

சென்னை: 4வது ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் தமிழ்நாடு – 2025 போட்டி தொடர்பாக சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: ஆகஸ்ட் 3 முதல் 12ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டியை தமிழ்நாடு நடத்துகிறது என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்தபோட்டி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறை. விளையாட்டில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாகி வருவது அனைவருக்கும் தெரிந்ததாகும்.

கடந்த சில ஆண்டுகளில், பிடே சதுரங்கப்போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை, உலக சர்ப் லீக் தகுதி தொடர், ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி, தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், சைக்ளோதான்ஸ், தெற்காசியாவின் முதல் பார்முலா 4 இரவு நேர சாலை பந்தயம், கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப்போட்டி 2023 உள்ளிட்ட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை தமிழ்நாடு நடத்தியுள்ளது.

இப்போது, ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த உள்ளதன் மூலமாக எங்கள் தொப்பியில் மற்றொரு இறகினை சேர்த்து உள்ளோம். இந்த போட்டி மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில் இது ஜப்பானில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இறுதி தகுதிச் சுற்றுப் போட்டி. இந்தியாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் (சர்பிங்கில்) தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்க உள்ளன.

இந்த சர்வதேச போட்டியில் சுமார் 150 விளையாட்டு வீரர்கள் போட்டியிட உள்ளனர். இந்த போட்டி நிகழ்வு தமிழ்நாட்டில் அலைச்சறுக்கு சுற்றுலாவை பெரிதும் ஊக்குவிக்கும். 2023 உலக சர்பிங் விளையாட்டு போட்டியில் பங்குபெற்ற 4 இந்திய சர்பிங் வீரர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

முந்தைய ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற்ற 8 இந்திய விளையாட்டு வீரர்களில் 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். நடைபெற உள்ள ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் 2026ல், இந்திய அணியில் பங்குபெறும் 12 விளையாட்டு வீரர்களில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரியது. இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

The post இந்தியாவிலேயே முதல்முறையாக மாமல்லபுரத்தில் நடக்கிறது ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை 4வது ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டி appeared first on Dinakaran.

Tags : 4th Asian Surfing Championship ,Mamallapuram ,India ,Chennai ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,4th Asian Surfing Championship Tamil Nadu – 2025 competition ,Dinakaran ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...