×

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள்: தமிழக அரசு ஏற்பாடு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலை போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டி தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இங்கு போட்டி தேர்வுகளுக்கு திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரி தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலை போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கடந்த 14ம் தேதி (நேற்று முன்தினம்) முதல் காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை திங்கள் – வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் நடத்தப்பட உள்ளது.

எனவே, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலை போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையலாம். விருப்பமுள்ளவர்கள் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஏ-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை- 32 என்ற முகவரியில் நேரில் அணுகலாம். தொலைபேசி எண்: 044-22500134, 9361566648. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள்: தமிழக அரசு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : TNPSC Group ,Tamil Nadu government ,Chennai ,TNPSC Group 2 ,Pa. Vishnu ,and Training Department ,State Career Guidance Center… ,
× RELATED கோயிலின் இடத்தில் இங்குதான் தீபம்...