- மத்திய அமைச்சர்
- கோயம்புத்தூர்
- மாநில மத்திய அமைச்சர்
- ஷோபா கரந்த்லஜே
- கோயம்புத்தூர் கொடிசியா
- யூனியன்
- தின மலர்
கோவை: தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. திட்டத்தில் விரைவில் மாற்றம் செய்ய உள்ளதாக கோவையில் ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறினார். கோவை கொடிசியாவில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பங்கேற்று தொழில்துறையினரிடம் கலந்துரையாடல் நடத்தினார்.
இந்த கலந்துரையாடலில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கொடிசியா செயலாளர் யுவராஜ் மற்றும் தொழில் துறையினர், சின்னவேடம்பட்டி பகுதியில் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் இ.எஸ்.ஐ. மருந்தகம் அமைக்கப்பட வேண்டும். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் இதய நோய் சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத நிதித் திட்டத்தின் கீழ் வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர், சிறு, குறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசியதாவது: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு எளிதாக கடன் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் நிறுவனங்களுக்கு ஆட்கள் பற்றாக்குறையை போக்க திறன் பயிற்சி அளிக்கப்படும். இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள், நர்சுகள் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் இருக்கிறது. இதனால் இ.எஸ்ஐ. பயனாளிகள் தனியார் மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சை பெறும் வகையில் இ.எஸ்.ஐ. திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கான இ.எஸ்.இ திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இதற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த மாற்றம் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
* பருத்தி உற்பத்தி, விளைச்சல் அதிகரிக்க நடவடிக்கை
மையத்தின் கரும்பு இனப்பெருக்கு நிலையத்தில் பருத்தி உற்பத்தி பெருக்கம் மற்றும் விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது இதில் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ஒன்றிய ஜவுளி துறை அமைச்சர் கிரிராஜ் சிங், ஹரியானா மாநில வேளாண்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை அமைச்சர்களிடம் வழங்கினர். பின்னர், ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நிருபர்களிடம் கூறுகையில், ‘நாடு முழுவதும் பருத்தி உற்பத்தி மற்றும் விளைச்சலை அதிகரிக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் மூலமாக புதிய ரக பயிர்கள் மூலம் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலையை வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்றார். தொடர்ந்து, அவரிடம் நிருபர்கள், தமிழ்நாடு அரசு ஒரு சதவீத செஸ் வரியை 4 ஆண்டுகளுக்கு முன் விலக்கிவிட்ட போதும் இதுவரை மத்திய கழகம் தமிழ்நாட்டிற்க்கான பஞ்சு விற்பனையை துவங்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ‘மாநில அரசு செஸ்வரியை குறைத்தாலும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்திற்கு பிறகு அது அமலுக்கு வரும். விரைவில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
The post சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிதில் கடன் இஎஸ்ஐ திட்டத்தில் விரைவில் மாற்றம்: கோவையில் ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.
