×

வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

 

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து உற்சவம் இன்று காலை துவங்கியது. நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது, 108 வைணவ தலங்களில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவமிக்கது. பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று (19ம் தேதி) மாலை தொடங்கியது. இதையொட்டி இரவு 7.45 மணிக்கு சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்டகம் அபிநயமும், வியாக்யானமும் நடந்தது. இரவு 9 முதல் 9.30 மணி வரை திருப்பணியாரம் அமுது செய்தலும், 9.30 முதல் 10 மணி வரை கோஷ்டி சேவையும் நடந்தது. இரவு 10 முதல் 10.30 வரை திருவாராதனம், 10.30 – 11 மணி வரை திருகொட்டாரத்தில் நம்பெருமாள் சிறப்பலங்கார சேவை, இரவு 11 முதல் 11.30 வரை தீர்த்த கோஷ்டி நடந்தது.

தொடர்ந்து பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித் திருநாள் இன்று தொடங்கியது. இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் ஆழ்வார்களுடன் புறப்பட்டு 8 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.

இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். பகல்பத்து உற்சவத்தின் 10வது நாளான 29ம் தேதி, நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். மறுநாள் (30ம் தேதி) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.

அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 5.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். சொர்க்கவாசல் திறப்பு தினமான 30ம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழித் திருநாள் தொடங்குகிறது. 5ம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 6ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 8ம் தேதி தீர்த்தவாரியும், 9ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

Tags : Vaikunda Ekadashi Festival Srirangam Ranganathar Temple ,Arjuna Hall ,Tiruchi ,Vaikunda Ekadashi ,Srirangam Ranganathar Temple ,Puloka ,Vaikundam ,Trinchi Srirangam Ranganathar ,Temple ,
× RELATED புத்தாண்டை ஒட்டி ஆனைக்கட்டி...