×

தனிநபர் பொருளாதார குவிப்பை தடுக்க சூப்பர் மார்க்கெட் – மளிகைக்கடை வியாபாரிகள் ஒன்றிணைய வேண்டும்: வணிகர் சங்க பேரமைப்பு அழைப்பு

சென்னை: தனிநபர் பொருளாதார குவிப்பை தடுக்க சூப்பர் மார்க்கெட் மளிகை வியாபாரிகள் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஓர் அங்கமாக தமிழ்நாடு சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடந்த 28ம் தேதி பேரமைப்பு மாநில தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று காலை பேரமைப்பு மாநில தலைமை அலுவலகம், ‘லெஜண்ட் சரவணா ஹாலில்’ தமிழ்நாடு சூப்பர் மார்க்கெட் அண்டு மளிகை வியாபாரிகள் சங்கம் தமிழகம் தழுவிய முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்றார். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில தலைமை செயலாளர் ராஜ்குமார் விளக்கி பேசினர்.

கூட்டம் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தமிழ்நாடு சூப்பர் மார்க்கெட், மளிகை வியாபாரிகள், கார்ப்பரேட் நிறுவன வணிக முன்னெடுப்புகளால் பாதிக்கப்பட்டு, சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் வாழ்வாதாரம் மட்டுமல்லாது சூப்பர் மார்க்கெட் வணிக வாழ்வாதாரம், பொருளாதார முடக்கம், பணியாளர்கள் வேலைவாய்ப்பு இழப்பு, மாநில வருவாய் இழப்பு என சங்கிலி தொடர் நெருக்கடிகள் தொடர்கிறது.

கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம், தனிநபர் கார்ப்பரேட்டுகளால் பொருளாதார குவிப்பை தடுக்கவும், கார்ப்பரேட் நிறுவனங்களால் அகில இந்திய அளவில் பரவலான வணிக பாதிப்புகளை தடுத்து நிறுத்தவும், இந்திய பொருளாதாரத்தை அகில இந்திய அளவில் காத்திடவும், அனைத்து சிறு, குறு, நடுத்தர வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காத்து வணிகத்திலும், பொருளாதாரத்திலும், பணி ஒதுக்கீட்டலிலும் சமநிலைச் சூழலை உருவாக்கிடவும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இப்பணியை முன்னெடுத்திருக்கிறது.

இக்கூட்டத்தின் வாயிலாக எடுக்க இருக்கும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி, தமிழ்நாடு சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை வியாபாரிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்த்து தீர்வுகளை காண்பதற்கு பேரமைப்பு களம் அமைத்துக்கொண்டிருக்கின்றது. தமிழகம் மட்டுமல்லாது அகில இந்திய அளவில், நமது பேரமைப்பின் நடவடிக்கைகளை எடுத்துச்செல்ல தமிழ்நாடு சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை வியாபாரிகள் சங்கம் ஓர் முன்னுதாரனமாக திகழ்ந்து, ஓரிடத்தில் பொருளாதார குவிப்பை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தனிநபர் பொருளாதார குவிப்பை தடுக்க சூப்பர் மார்க்கெட் – மளிகைக்கடை வியாபாரிகள் ஒன்றிணைய வேண்டும்: வணிகர் சங்க பேரமைப்பு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Merchants' Association ,Chennai ,Tamil Nadu Merchants' Association ,Tamil Nadu Supermarket and Grocery Traders' Association… ,Grocery Traders ,Dinakaran ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்