×

நிபா வைரஸ் குறித்து பீதி அடைய தேவையில்லை: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: கேரளாவின் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் சமீபத்தில் நிபா வைரஸ் நோய் தாக்கம் பதிவாகி உள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு, நோய் பரவல் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை எவ்வித நிபா வைரஸ் நோய் தாக்கங்கள் பதிவாகவில்லை என்றாலும், பொதுமக்கள் பதற்றமின்றி, விழிப்புடன் இருந்து அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நிபா வைரஸ் என்பது விலங்கியல் மூலம் பரவும் ஒரு நோய் தொற்றாகும். இது பழ வகை வவ்வால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. வவ்வாலின் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை உண்ணுவதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலமாகவோ நோய் தொற்று பரவுகிறது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, குழப்பம், தூக்கமின்மை, மூச்சுத்திணறல் அல்லது மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள், குறிப்பாக கேரளாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்த பிறகு அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவரை தொடர்பு கொண்ட பிறகு இதுபோன்ற அறிகுறிகள் யாரிடமாவது தோன்றினால், அவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

மக்கள் கழுவப்படாத அல்லது விழுந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும், சாப்பிடுவதற்கு முன்பு அனைத்து பழங்களையும் நன்கு கழுவவும், சோப்பால் கைகளை கழுவ வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தால், மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்கவும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களை, சிறப்பு கவனம் செலுத்தி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்து விதமான நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே, நிபா வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

The post நிபா வைரஸ் குறித்து பீதி அடைய தேவையில்லை: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Public Health Department ,Chennai ,outbreak ,Kerala ,Palakkad ,Malappuram ,Tamil Nadu government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு