×

திருச்செந்தூரில் திரண்ட கூட்டம் பாஜ, அதிமுகவுக்கு விஷ காய்ச்சல்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

நெல்லை: நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேரோட்டத்தை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி 519வது ஆண்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. 150 ஆண்டுகளாக ஓடாமல் தடைபட்டிருந்த சில தேர்கள், திமுக ஆட்சியில் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து பேசி மீண்டும் தேரோட்டம் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் அதிமுகவுக்கு கூடிய கூட்டத்தால் முதல்வருக்கு ஜுரம் என்று எடப்பாடி கூறி இருப்பது நகைப்புக்குரியது. திருச்செந்தூரில் திங்கட்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் கூடிய கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போய் உள்ளனர். திமுக ஆட்சி மீண்டும் வரும் என திருச்செந்தூரில் திரண்ட மக்கள் கூட்டம் பிரதிபலிக்கிறது. உண்மையில் பாஜ, அதிமுக கூட்டணிக்கு தான் விஷக்காய்ச்சல் வந்துள்ளது. தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் உள்ள ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் அறநிலைத்துறை உதவியுடன் செய்யப்பட்டு வருகிறது. சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் படி எடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஓலைச்சுவடிகளை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ‘எல்லோருக்கும் எல்லாம்’ வழங்கும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்கி வருகிறது. நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில் மதச்சார்பின்றி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நண்பர்களும் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். இந்த ஒற்றுமை எந்நாளும் தொடர திமுக ஆட்சி மீண்டும் மலர மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும், அதற்கு நெல்லையப்பரும் அருள்பாலிப்பார் என நம்புகிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

The post திருச்செந்தூரில் திரண்ட கூட்டம் பாஜ, அதிமுகவுக்கு விஷ காய்ச்சல்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,BJP ,AIADMK ,Minister ,Sekarbabu ,Nellai ,Hindu ,Nellaiappar Gandhimati Amman Temple ,Nellaiappar ,Gandhimati Ambal Temple ,Anip Perundhiruvizha ,Nellai Town ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...