×

காவேரிப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிதறிக்கிடக்கும் தோல்கழிவுகள்: வாகன ஓட்டிகள் அவதி

காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் அருகே சிதறிக்கிடக்கும் தோல்கழிவு பொருட்களை அகற்றவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்துக்கள் தடுக்க காவேரிப்பாக்கம் அருகே பூண்டி சந்திப்பு, சுமைதாங்கி, ராமாபுரம், திருப்பாற்கடல், ஓச்சேரி, பெரும்புலிப்பாக்கம் சந்திப்பு உள்ளிட்ட 9 சந்திப்புகளில் மேம்பால பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் விபத்துக்கள் குறைந்து, போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு எண்ணற்ற வாகனங்கள் வந்து செல்கிறது.

இதில் எம்.சாண்ட் எடுத்து செல்லும் டாரஸ் லாரி, வைக்கோல் ஏற்றிச்செல்லும் லாரிகள், அதிக அளவில் தோல் கழிவுகள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் ஜல்லி கற்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் மேற்பகுதியில் தார்பாய் மூடி எடுத்து செல்வதில்லை. இதனால் இந்த பொருட்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி விழுகிறது. அப்போது அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் இந்த பொருட்கள் மீது ஏற்றி இறக்குவதால் விபத்துக்குள்ளாகிறது. காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் பகுதியில், கனரக வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டுள்ள தோல் கழிவுகள் சாலையில் சிதறிக்கிடக்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலனை கருத்தில் கொண்டு, அதிக அளவில் பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது தார் பாய் மூடி எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாலையில் சிதறியுள்ள தோல் கழிவுகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காவேரிப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிதறிக்கிடக்கும் தோல்கழிவுகள்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : National Highway ,Kaveripakkam ,Ranipet district ,Poondi Junction ,Sumaitangi ,Ramapuram ,Thiruparkadal ,Ocheri ,Perumpulipakkam Junction ,Kaveripakkam… ,Dinakaran ,
× RELATED திருமங்கலத்தில் பரபரப்பு:ஜிஎஸ்டி...