×

தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் வீடுவீடாக விண்ணப்பம் வினியோகம்: 1 லட்சம் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்

சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற தமிழகம் முழுவதும் இன்று முதல் வீடு, வீடாக விண்ணப்பம் வினியோகிக்கப்பட உள்ளது. இப்பணியில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிழ்நாடு அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ரேசன் கார்டு வைத்திருக்கும் தகுதி வாய்ந்த பெண்கள் ஒரு கோடியே 14 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருக்கின்றனர். இன்னும் சிலர் தகுதி இருந்தும், இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்து காத்து இருந்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து இத்திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ, அவ்வளவு பேருக்கும் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை தரப்படும் என சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்து இருந்தார். இதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பங்கள் வீடு, வீடாக வினியோகிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 3 மாதங்கள் நடைபெறும் பணியில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுவர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக இந்த மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான தகுதிகளில் 3 பிரிவுகளில் தமிழக அரசு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது பல்வேறு அரசு துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணியாற்றி, தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதிவாய்ந்த பெண்கள், இந்த திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், ஆதரவற்ற-கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்” என்று அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் வீடுவீடாக விண்ணப்பம் வினியோகம்: 1 லட்சம் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Mizoram government ,
× RELATED டிட்வா புயல் காரணமாக...