×

தமிழ்நாட்டில் பெண் காவலர்கள் மற்ற பாதுகாப்பு பணிகளுக்காக அழைத்துச் செல்லப்படுவதில்லை: தேவைக்கு மட்டுமே நியமனம்; டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

சென்னை: தமிழ்நாடு டிஜிபி சங்கர்ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 30.6.2025 அன்று காணொலி வாயிலாக மாவட்ட மற்றும் மாநகர காவல் அதிகாரிகளுடன் நடந்த கலந்தாய்வின் போது காவல்துறை கூடுதல் இயக்குநர், சட்டம் – ஒழுங்கு டேவிட்சன் ஆசிர்வாதம், பாதுகாப்பு பணிகளுக்கு அதிக பெண் காவலர்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார். போக்சோ குற்றங்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பிற குற்றங்களில் விரைவாக விசாரணை நடத்தி வழக்குகளை விரைந்து முடிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற முக்கிய தேவையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.

சட்ட விதிகளின்படி, போக்சோ வழக்குகளில் 60 நாட்களுக்குள் இறுதி அறிக்கைகளை தாக்கல் செய்வது கட்டாயமாகும். இதுபோன்ற வழக்குகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது உடனடி கவனம் தேவை, என்பதை மனதில் கொண்டு, பாதுகாப்பு பணிகளுக்கு பெண் காவலர்களை அதிகமாக நியமிக்க வேண்டாம் என்று அத்தகைய ஆலோசனை வழங்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான முக்கியமான வழக்குகளை விசாரிப்பதிலும், வாக்குமூலங்களை பதிவு செய்வதிலும் இன்றியமையாத பங்கு வகிக்கும் பெண் காவலர்களை தேவையின்றி திசைதிருப்பக்கூடாது என்பதை உறுதி செய்வதே இந்த அறிவுறுத்தலின் முதன்மை நோக்கமாகும்.

காவல் துறையில் பெண் காவலர்களை பணியமர்த்துவதில் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் பெண் காவலர்கள் காவல்துறையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளனர் என்பதும் ​​அவர்கள் காவல்துறை பணியை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறார்கள் என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது. ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள், முக்கிய பிரமுகர்களின் வருகை போன்ற பாதுகாப்பு பணிகளில் பெண்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சட்ட விதிகளின்படி, பெண் குற்றவாளிகளைக் கைது செய்தல், குற்றம் சாட்டப்பட்ட பெண்கள் அல்லது பெண் சாட்சிகளின் வாக்குமூலங்களை விசாரித்து பதிவு செய்தல், பாதுகாப்பு பணிகளில் பெண்களின் கூட்டத்தைக் கையாளுதல் போன்ற சில பணிகளை பெண் காவலர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் அன்றாட பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான மனுக்கள் மற்றும் வழக்குகளைக் கையாள அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் பெண் காவலர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவதால், அவர்கள் வழக்கமான முறையில் மற்ற பாதுகாப்பு பணிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதில்லை, மேலும் தேவைப்படும்போது மட்டுமே பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள். காவல் பணிகளில் பெண் காவலர்களின் பயன்பாடு குறித்து காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) வழங்கிய அறிவுரைகளை இந்த சூழலில் பார்க்க வேண்டப்படுகிறது.

The post தமிழ்நாட்டில் பெண் காவலர்கள் மற்ற பாதுகாப்பு பணிகளுக்காக அழைத்துச் செல்லப்படுவதில்லை: தேவைக்கு மட்டுமே நியமனம்; டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DGP ,Shankar Jiwal ,Chennai ,Law and Order ,Davidson Ashirvath ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...