×

கிழக்கு கடற்கரை சாலையில் வாடகை வீடுகளை லீசுக்கு விட்டு பலரிடம் ரூ.1.60 கோடி மோசடி

துரைப்பாக்கம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை சிங்காரவேலன் தெருவில் ஜூன் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் வீடு கட்டும் மற்றும் விற்பனை நிறுவனத்தை, நிஷா என்பவர் நடத்தி வந்துள்ளார். இவர், வீடுகளை லீசுக்கு விடும் நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளார். அதன்படி, இவரிடம் லீசுக்கு வீடு கேட்டு வந்தவர்களிடம், ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் ரூ.6 லட்சம், ரூ.12 லட்சம் வீதம் பெற்றுக்கொண்டு, வீடு கொடுத்துள்ளார்.

இவ்வாறு லீசுக்கு விடப்பட்ட வீடுகள் தனக்கு சொந்தமானது என நிஷா கூறிவந்த நிலையில், சில மாதங்கள் கழித்து, வேறு ஒருவர் இந்த வீடுகளுக்கு வந்து, இந்த வீடு எங்களுக்கு சொந்தமானது. நிஷா என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தோம். ஆனால், அவருக்கு பதிலாக வேறு ஒருவர் குடியிருப்பதை இப்போது தான் நாங்கள் அறிகிறோம். நீங்கள் யார், என கேட்டுள்ளனர். இதனால், லீசுக்கு வீடு எடுத்தவர்கள் அதிர்ச்சியடைந்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்.

அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்கள், வாடகைக்கு வீடு எடுத்த நிஷா, சில மாதங்கள் வாடகை சரிவர கொடுத்து வந்த நிலையில் தற்போது, வாடகையை தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே, வீட்டை காலி செய்யுங்கள், என கூறியுள்ளனர். இதனால் வீடு லீசுக்கு எடுத்தவர்கள் அதிர்ச்சியடைந்து, நிஷாவை செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இதையடுத்து, நேற்று ஜூன் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது, அந்த நிறுவனம் மூடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதேபோல் சுமார் 30க்கும் மேற்பட்டோர் நிஷாவிடம் ரூ.7 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கொடுத்து வீட்டை லீசுக்கு எடுத்து ஏமார்ந்தது தெரிந்தது. மேலும் விசாரணையில், கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம், ஈஞ்சம்பக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து, அதை பலருக்கு லீசுக்கு விட்டு சுமார் ரூ.1.60 கோடி வரை நிஷா மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 30 பேர் நேற்று நீலாங்கரை காவல் நிலையத்தில் நிஷா மீது புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, நிஷாவை தேடி வருகின்றனர்.

The post கிழக்கு கடற்கரை சாலையில் வாடகை வீடுகளை லீசுக்கு விட்டு பலரிடம் ரூ.1.60 கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : East Coast Road ,Harappakkam ,Nisha ,June Homes Private Limited ,Nilangarai Singaravelan Street, Chennai East Coast Road ,Dinakaran ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...