
புதுடெல்லி: இந்தியாவில் வரும் செப். 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை ப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் தொடர் நடைபெறவிருந்தது. தற்போது இந்த போட்டி ஸ்பான்சர்கள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து இந்த தொடரின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ஹென்ரிக் பியூட்னர் கூறுகையில், ‘‘கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாங்கள் அனுபவித்த அதே சூழ்நிலைதான் இன்னும் எங்களிடம் உள்ளது. நான் பல இந்திய ஸ்பான்சர்களை அணுகினேன். ஆனால் யாரும் முன்வரவில்லை. அதனால்தான் இந்த நிகழ்வை வேறு இடத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளோம். அதற்கான பணிகளை அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர்’’ என்றார்.
கார்ல்சன் தற்போது ப்ரீஸ்டைல் செஸ் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 65 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க ஜிஎம் பேபியானோ கர்வானா, ஜெர்மன் லெக் வெற்றியாளர் வின்சென்ட் கீமர் ஆகியோர் அடுத்த இடத்தில் உள்ளனர். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 16 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளார். டெல்லியில் நடைபெறவிருந்த ப்ரீஸ்டைல் செஸ் போட்டி உலக செஸ் நட்சத்திரங்களை இந்திய மண்ணுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை காண ஆவலுடன் இருந்த இந்திய ரசிகர்களுக்கு இந்த ரத்து ஒரு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
The post இந்தியாவில் செப்டம்பரில் நடக்கவிருந்த ப்ரீஸ்டைல் செஸ் தொடர் ரத்து: ஸ்பான்சர் இல்லாததால் பரிதாபம் appeared first on Dinakaran.
