×

வேலூர் மாநகராட்சியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் திருநங்கை

வேலூர்: வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக வேட்பாளராக திருநங்கை கங்கா போட்டியிடுகிறார்.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், வேலூர் ஓல்டு டவுன் உத்திரமாதா கோவில்  பின்புறமுள்ள பகுதியில் வசித்து வரும் திருநங்கை கங்கா(49) என்பவர் திமுகவில் போட்டியிட சீட் கேட்டு  விண்ணப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் மாநகராட்சி 37வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட திமுக தலைமை அவருக்கு வாய்ப்பு அளித்துள்ளது.இதுகுறித்து திருநங்கை கங்கா கூறியதாவது:நான் கடந்த 2002ம் ஆண்டு முதல் திமுகவில் உறுப்பினராக உள்ளேன். கடந்த கருணாநிதி ஆட்சியின் போது திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் பதவி வகித்து வந்தேன். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினேன். மேலும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. நான் வசிக்கும் பகுதியில் போர்வெல்  சேதமடைந்தால் எனது சொந்த செலவில் அவற்றை சீரமைத்துள்ளேன். ஏழைகளுக்கு ஈமச்சடங்கு உதவியும் செய்து கொடுத்துள்ளேன்.இந்நிலையில் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தேன். எனது சமூக சேவைகள் குறித்து அவர்கள் விசாரித்தார்கள்‌. தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் எனக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்து கண்டிப்பாக வெற்றி பெறுவேன். மக்கள் நலப்பணிகளில் திறம்பட செயலாற்றுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து திமுக மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்எல்ஏவிடம் கேட்டபோது, ‘37வது வார்டில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என அந்த பகுதி பொதுமக்களிடம் நேரடியாக விசாரித்தோம். பொதுமக்கள் பலர் கங்காவிற்கு சீட் கொடுங்கள். அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்றனர். மேலும் கங்காவுக்கு அந்த பகுதியில் நற்பெயர், மக்கள் செல்வாக்கு உள்ளது. அதன் அடிப்படையில் கட்சி மேலிடம் அவருக்கு சீட் வழங்கியுள்ளது’ என்றார்.வேலூர் மாநகராட்சியில் ஆளும் கட்சியான திமுகவில் போட்டியிட கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் திருநங்கை ஒருவருக்கு சீட் வழங்கி இருப்பதற்கு அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி, பல்வேறு கட்சியினரும் வரவேற்பு அளித்துள்ளனர்….

The post வேலூர் மாநகராட்சியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் திருநங்கை appeared first on Dinakaran.

Tags : Vellore Corporation ,Vellore ,Ganga ,Ward ,Tamil Nadu ,Kasagam ,
× RELATED வேலூர் மாநகராட்சி சர்கார் தோப்பில் ₹68...