×

மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் கொலை குற்றவாளிகளை நெருங்குகிறது தனிப்படை: முன் விரோதம் காரணமா?

ஆலந்தூர்: சென்னை மடிப்பாக்கம் பெரியார்நகர் 6வது தெருவை சேர்ந்தவர் செல்வம்(35). இவருக்கு மனைவி, 1 மகன், 1 மகள் உள்ளனர். செல்வம் 188வது வார்டு தி.மு.க வட்ட செயலாளராக இருந்தார். சதாசிவம் நகரில் அலுவலகம் உள்ளது. சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பாக அவரது மனைவி போட்டியிட மனு செய்துள்ளார். இந்தநிலையில், நேற்று இரவு தேர்தல் சம்மந்தமாக கட்சி நிர்வாகிகளுடன் செல்வம் பேசிக்கொண்டிருந்தார். இரவு 9 மணி அளவில் ஒரு போன்கால் வந்ததும் பேசியபடியே அலுவலகத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல்  செல்வத்திற்கு சால்வை அணிவிப்பது போல் பாவனை செய்து மறைத்துத் வைத்திருந்த பட்டா கத்தியால் சரமாரி வெட்டிவிட்டு பைக்கில் தப்பி ஓடியுள்ளனர்.இதில் அந்த கும்பல் செல்வத்தை கொலைவெறியுடன் தாக்கும்போது தமிழரசன் என்பவர் தடுக்க முயன்றபோது அவருக்கும் வலதுகையில் பலமாக வெட்டு விழுந்துள்ளது, ஆனால், செல்வத்துடன் இருந்தவர்கள் தெறித்து ஓடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் இருந்த செல்வத்தை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சிகிச்சை அளிக்கும் முன்னே செல்வம் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கூடுதல் கமிஷனர் கண்ணன், பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரதீப், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் பிராங்க்  டி ரூபன் மற்றும் போலீசார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைத்து தேர்தல் சம்பந்தமாக செல்வம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா அல்லது நிலத்தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் ஏதாவது இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின்போது செல்வத்துடன் இருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் சந்தேகப்படும் ரவுடிகளின் பட்டியலை வைத்தும் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் சென்னை செம்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவருக்கும் செல்வத்துக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக, செல்வத்தால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று போலீசில் புகார் செய்திருந்தார் அதிமுக பிரமுகர். மேலும், செல்வத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர், தற்போது அதிமுகவில் சேர்ந்துள்ளார். பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலால், செல்வத்தின் நண்பர், தூத்துக்குடி அதிமுக பிரமுகருடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். அதோடு செல்வத்துக்கும் ரவுடி சி.டி.மணிக்கும் நல்ல பழக்கம் இருந்துள்ளது. இதனால் சி.டி.மணியின் எதிரி சம்பவம் செந்தில், செல்வத்தின் மீது கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ரியல் எஸ்டேட் மோதல் மற்றும் ரவுடிகளுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால் செல்வத்தை அவர்கள் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் குற்றவாளிகளை போலீசார் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஓரிரு நாளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் கொலை குற்றவாளிகளை நெருங்குகிறது தனிப்படை: முன் விரோதம் காரணமா? appeared first on Dinakaran.

Tags : Madipakkam ,DMK ,ALANTHUR ,Selvam ,6th Street, Periyarnagar, Madipakkam, Chennai ,
× RELATED மடிப்பாக்கத்தில் தொடர் மின்தடை:...