×

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு புதிய லோகோ அமைச்சர், எம்பிக்கள் முன்னிலையில் கலெக்டர் வெளியிட்டார்

நாமக்கல், ஜூன் 25: நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட, கொள்கை அளவில் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, விரைவில் மத்திய கூட்டுறவு வங்கி தனது வங்கி பணியை துவங்க உள்ளது. இதையொட்டி, வங்கிக்கு தனியாக இலச்சினை (லோகோ) உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் வெளியீட்டு விழா, நேற்று மாலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. வங்கி லோகோவை, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார் எம்பி, மாதேஸ்வரன் எம்பி ஆகியோர் முன்னிலையில், கலெக்டர் உமா வெளியிட்டார்.

விழாவில், மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார் எம்பி பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை உருவாக்கி, அதற்கான அரசாணையை கடந்த ஆண்டு வெளியிட்டார். விரைவில் மத்திய கூட்டுறவு வங்கி, தனது வங்கி பணியை துவக்க உள்ளது. இதற்கு பெரும் முயற்சியை மாவட்ட கலெக்டர் உமாவும், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருளரசுவும் மேற்கொண்டனர். இம்மாவட்டத்தில் இரண்டு ஆண்டாக பணியாற்றிய கலெக்டர் உமா, இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியுள்ளார். அவருக்கு வெறும் வார்த்தையால் நன்றி என்று மட்டும் சொல்லி விட முடியாது. அவரது சிறந்த பணியை, இம்மாவட்டம் என்றைக்கும் நினைவு கூறும் வகையில், அவரது கையால் வங்கியின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

போதமலையில் ரூ.140 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற, மாவட்ட கலெக்டர் தமிழக அரசுக்கு எழுதி அனுப்பிய விரிவான அறிக்கை தான், காரணமாக அமைந்தது. 20 ஆயிரம் பேருக்கு கலெக்டரின் முயற்சியால் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் இம்மாவட்டம் கண்டுள்ள வளர்ச்சி பணிகள் ஏராளம். அதற்கு எல்லாம் உறுதுணையாக இருந்தவர் நமது கலெக்டர்.

இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதால், அவர் மாறுதலில் செல்கிறார். சென்னையில் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறையின் கூடுதல் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் அவரது சீரிய பணி தொடரும். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாவட்ட கலெக்டர் உமா, ‘தனிமரம் தோப்பாகாது. அதன்படி, இம்மாவட்டத்தில உள்ள அனைத்து துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தான், வளர்ச்சி திட்டங்களை மாவட்டத்தில் நிறைவேற்ற முடிந்தது. வருவாய்த்துறையில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் முதல் ஆர்டிஓ வரை சிறப்பாக பணியாற்றியதால் தான், ஏராளமான விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க முடிந்தது,’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், எஸ்பி ராஜேஷ்கண்ணன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சந்தானம், இணைப்பதிவாளர் அருளரசு, மேயர் கலாநிதி, துணைமேயர் பூபதி, திமுக நகர செயலாளர்கள் சிவக்குமார், ராணாஆனந்த் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு புதிய லோகோ அமைச்சர், எம்பிக்கள் முன்னிலையில் கலெக்டர் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Namakkal District Central Cooperative Bank ,Namakkal ,Reserve Bank of India ,Central Cooperative Bank ,Dinakaran ,
× RELATED திருச்செங்கோட்டில் 2,106 தேர்வர்கள் பங்கேற்பு