நாமக்கல், டிச.22: நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டியுள்ளனர். வீடு, வீடாக சென்று பட்டியல் சரிபார்ப்பில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 4ம் தேதி முதல், கடந்த 14ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப்பணி நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், தீவிர சிறப்பு திருத்தப்பணிகள் நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து கடந்த 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 14 லட்சத்து 66 ஆயிரத்து 660 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தற்போது, வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 12 லட்சத்து 72ஆயிரத்து 954 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஆண்கள் 6,17,269, பெண்கள் 6,55,490, மற்றவர்கள் 195 பேர் ஆவார்கள். வாக்களார் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தின் போது, இறந்த வாக்காளர்கள் 66,312, வெளியூர்களுக்கு குடி பெயர்ந்தவர்கள் 1,00,201, இருமுறை பதிவு செய்துள்ளவர்கள் 8,636, கண்டறிய முடியாதவர்கள் 18,023, மற்றவை 534 என மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 706 பேர் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
அதிகபட்சமாக குமாரபாளையம் தொகுதியில் 20.07 சதவீத வாக்காளர்களும், குறைந்த பட்சமாக ராசிபுரத்தில் 8.91 சதவீத வாக்காளர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் விபரங்கள் தொகுதி வாரியாகவும், பாகம் வாரியாகவும் நாமக்கல் மாவட்ட வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு, வரைவு வாக்காளர் பட்டியல் பாகம் வாரியாக அச்சிடப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது இடம் பெற்றுள்ளதா என்பதை மக்கள் ஆர்வத்துடன் கடந்த இரண்டு நாட்களாக பார்த்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இணையதளம் மூலம், தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை வைத்து தங்களது பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து வருகின்றனர். பெரும்பாலும் கணக்கெடுப்பு படிவம் கொடுத்த அனைவரின் பெயரும், வரைவு வாக்காளார் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
கணக்கெடுப்பு படிவம் கொடுக்காதவர்களின் பெயர்கள் மட்டும் தான் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்ககளை, வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களை சரிபார்க்கும் படி, அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் இன்று முதல் வீடு, வீடாக சென்று வரைவு வாக்களார் பட்டியலை சரிபார்க்கும் பணியில் ஈடுபட உள்ளனர். சிறப்பு தீவிர திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் மீதான கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகள் வரும் 18ம் தேதி வரை பெறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இப்பணிக்காக கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் 120 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தினமும் 50 கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளை கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அலுவலரால் விசாரணை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

