×

சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு

புதுடெல்லி: சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் தனது பாராட்டை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த குருமுகா சிங் என்பவருக்கு எதிராக ஐடி சட்டத்தின் பிரிவு 420 மற்றும் பிரிவு 66டி ஆகியவற்றின் கீழ் சைபர் குற்றங்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராகவும், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் சம்பந்தப்பட்ட நபர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் ஜாய்மால்யா பக்‌ஷி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த விவகாரத்தில் எனது செயல்பாடுகள் என்பது ஒரு தனிநபருக்கு எதிரான ஒரு தனிப்பட்ட நிகழ்வு ஆகும். பொது ஒழுங்கைப் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. இருப்பினும் சைபர் குற்றங்களுக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சட்டப் பிரதிநிதித்துவத்திற்கு போதுமான அவகாசமும் வழங்கப்படவில்லை. குறிப்பாக 25ம் தேதி விசாரணை என்று, 23ம் தேதி தான் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் நான் மதுரையில் வசிக்கிறேன். ஆனால் விசாரணை சென்னையில் நடந்தது. இதனை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் என் மீது முன்னதாக குற்றப்பின்னணி எதுவும் கிடையாது. இருப்பினும் அதிகப்பட்சமாக 12 மாதங்கள் தடுப்பு காவல் சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் குண்டர் போன்ற தடுப்பு காவல் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பது என்பது அது அரசின் விருப்புரிமை ஆகும். தடுப்புக்காவல் காலத்தை ரிட் அதிகார வரம்பில் எங்களால் அதாவது உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்க முடியாது.

சைபர் குற்ற விவகாரத்தில் தடுப்புக்காவலுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றால், அந்த உத்தரவு என்பது தானாகவே செயலிழந்து விடும். இருப்பினும் அதற்கான கால அளவைக் குறைக்க முடியாது. மேலும் வழக்கு குறித்த முழு தகவல்கள் குறித்த அறிக்கையை மனுதாரரும், அதேப்போன்று எதிர்மனுதாரர் பதில் மனுவையும் தாக்கல் செய்யுங்கள். வழக்கை புதன்கிழமை (நாளை மறுநாள்) பட்டியலிட்டு விசாரிக்கிறோம். இருப்பினும் சைபர் சட்ட குற்றவாளிகளுக்கு எதிராக குண்டர் போன்ற தடுப்புச் சட்டங்கள் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவது என்பது ஒரு நல்ல போக்கு ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க அணுகுமுறை. குறிப்பாக இதுபோன்ற குற்றவாளிகளுக்கு எதிராக சாதாரண குற்றவியல் சட்டங்கள் வெற்றி பெறுவது கிடையாது என்று தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசுக்கு பாராட்டை தெரிவித்து வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

 

The post சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Tamil Nadu government ,New Delhi ,Gurumuka Singh ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED நிதித்துறை இணைஅமைச்சர் பதவி...