×

முதலமைச்சர் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது ஆங்கில துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை மகிழ்ச்சி

சென்னை: திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டை என்ற சிறு கிராமத்தில் பிறந்த திருநங்கையான ஜென்சி, இளநிலை ஆங்கில படிப்பை திருத்தணி சுப்பிரமணியர் அரசு கலை கல்லூரியில் முடித்துள்ளார். தொடர்ந்து எம்.ஏ மற்றும் எம்.பில் படிப்பை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் முடித்து, பி.ஏ மற்றும் எம்.ஏ இரண்டிலும் தங்க பதக்கத்துடன் முதல் திருநர் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து முனைவர் ஆராய்ச்சி படிப்பை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து லயோலா கல்லூரியில் ஆங்கில துறையில் உதவி பேராசிரியராக திருநங்கை ஜென்சி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய அளவில் ஆங்கில துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருநங்கை ஜென்சி கூறுகையில், ‘‘‘டாக்டர் ஜென்சி என என்னை குறிப்பிட்டு முதல்வர் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அளவில் ஆங்கிலத்துறையில் முதல் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். என்னுடைய ஆங்கிலத்துறை தலைவர் மேரி வித்யா பொற்செல்வியின் வழிகாட்டுதலில் தான் இதை முடித்தேன். அவர் இல்லை என்றால் நான் இந்த உயரத்திற்கு வந்திருக்க முடியாது.

சமூகத்தில் திருநர் மக்களை பார்க்கும் விதம் எப்போதுமே வித்தியாசமாகத்தான் உள்ளது. இது என்னுடைய வளர்ச்சி மட்டும் இல்லை, ஒட்டுமொத்தமாக திருநர் வளர்ச்சியாக பார்க்கிறேன். கல்வி மட்டும் தான் மனித வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழ் புதல்வன் திட்டத்தில் திருநங்கைகளை தமிழ்நாடு அரசு சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது வரவேற்கதக்க ஒன்று. எனக்கு அரசு கல்லூரியில் ஒரு நிரந்தர வேலையை கருணை அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு வைக்கிறேன். இது என்னை போன்ற மற்ற திருநங்கைகளுக்கும் படித்தால் அரசு துணை நிற்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கும்,’’ என்றார்.

 

The post முதலமைச்சர் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது ஆங்கில துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,R.K. Pettai ,Tiruttani, Jency ,Tiruttani Subramaniar Government Arts College ,Vyasarpadi Ambedkar Government Arts College… ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...