சென்னை: மா சாகுபடி விவசாயிகள் பிரச்னைக்கு நடவடிக்கை எடுத்த பின்பு போராட்ட அறிவிப்பை வெளியிடுவது எதற்காக என்று எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் சக்கரபாணி, அபத்த பொய்களால் திராவிட மாடல் அரசை அசைத்துக் கூட பார்க்க முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து, தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மா’ சாகுபடி விவசாயிகளுக்காக திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது அதிமுக. மா விவசாயிகளின் பிரச்னையை அரசு தீர்த்த பின்பும் போராட்டத்தை அதிமுக நடத்துகிறது என்றால் அதற்கு அரசியல் காரணம் தவிர வேறு என்ன இருக்க முடியும்? பிரச்னைக்கு அரசு தீர்வு காணாவிட்டால் அதை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டலாம். ஆனால், தீர்வு கண்ட பிறகும் நடவடிக்கை எடுத்துவிட்ட பிறகும் உண்ணா விரதப் போராட்டத்தை அறிவிப்பது எதற்காக? மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படும் எனச் சொல்லப்பட்ட 20ம் தேதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை பழனிசாமி அறிவித்தது அரசியல் ஆதாயம் பெறத்தானே.
’இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என பழனிசாமி அறிக்கையில் பச்சைப் பொய் சொல்வதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ‘மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டி வரியை 12 லிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும்’ என திமுக அரசை பழனிசாமி வலியுறுத்துவது எல்லாம் விந்தையிலும் விந்தை. அதற்கான அதிகாரத்தை வைத்திருக்கும் ஒன்றிய பாஜகவைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடாமல் அறிக்கை வெளியிடுவதன் மூலம் விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசைக் காப்பாற்றி தனது அடிமை விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார். ஒன்றிய அரசு என்றால் கொஞ்சல், மாநில அரசு என்றால் எரிச்சல் என இரட்டை வேடம் போடுகிறார் பழனிசாமி. மா விவசாயிகளின் நலனை மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனைக் காப்பாற்றி வருவது திராவிட மாடல் அரசு தான். வேளாண் துறைக்குத் தனிப் நிதிநிலையை அறிவித்து உழவர் குடிமக்களின் வாழ்வை உயர்த்தப் பாடுபட்டு வரும் திராவிட மாடல் அரசை இந்த அபத்தப் பொய்களால் எல்லாம் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ‘மா’ சாகுபடி விவசாயிகள் பிரச்னையில் நடவடிக்கை தீர்வுக்கு பிறகும் அதிமுக போராட்ட அறிவிப்பு எதற்காக?: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி appeared first on Dinakaran.
